முக்கிய செய்திகள்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்:பெரிய நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      இந்தியா
Enforcement

 

புது டெல்லி,ஏப்.- 11 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரூ. 4,300 கோடி அளவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஃபெமா விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் இயக்குனர் நிலையிலான அதிகாரியிடம் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்வான் டெலிகாம், மும்பையை சேர்ந்த லூப் மொபைல் இந்தியா லிமிடெட், டெல்லியை சேர்ந்த எஸ். டெல் பிரைவேட் லிமிடெட், சென்னையை சேர்ந்த வெல்காம் கம்யூனிகேசன்ஸ் இந்தியா லிமிடெட், வெல்காம் கம்யூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளன. 

மேலும் டாடா குழுமத்தை சேர்ந்த வர்ஜின் மொபைல்ஸ் நிறுவனத்தின் மீதான ஃபெமா விதிமீறல் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. ரூ. 3,608 கோடி மதிப்பிலான பங்குகளை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கியதில் ஃபெமா விதிகள் மீறப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் லூப் மொபைல் இந்தியா நிறுவனம் ரூ 481 கோடி அளவுக்கும், லூப் டெலிகாம் நிறுவனம் ரூ. 184.28 கோடி அளவுக்கும் ஃபெமா விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்திருப்பதாக மதிப்பிடப்பட்ட தொகையில் 3 மடங்கு அளவுக்கு அபராதம் விதிக்க ஃபெமா விதிகளில் இடமிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: