முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் மீதான நீதிமன்ற அவமதிப்பு: 18ல் விசாரணை

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விரிவான விசாரணை வரும் 18ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க அவர் நிர்பந்தம் செய்தார். இதற்கு பிரதிபலனாக சன் டி.வி. நிறுவனத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கும் 300 கோடி ரூபாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. 

எனவே இது குறித்து விசாரிக்க கோரி ஜனதா கட்சித் தலைவர் டாக்டர்.சுப்பிரமணியன்சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ப.சிதம்பரம், கார்த்திக்சிதம்பரம் ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான நிறுவனம் மூலம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சுவாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதை எதிர்த்து டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சிங்கப்பூர் நிறுவனத்தையும் இவ்வழக்கில் சேர்க்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சிங்கப்பூர் நிறுவனத்தின் இயக்குனர் சி.பி.என். ரெட்டி வழக்கில் சேர்க்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கின் விரிவான விசாரணை வரும் 18ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்