முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்கில் தாக்குதலுக்கு முயன்ற வங்கதேச வாலிபர்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், அக். 19 - நியூயார்க்கில் உள்ள அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்க முயன்றதாக வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மத் அசான் நபீஸ் என்ற 21 வயது வாலிபரை அந் நாட்டு எப்.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

435 கிலோ வெடிமருந்துகளை நிரப்பிய ஒரு வேனை இந்த வங்கிக் கட்டடத்தின் முன் நிறுத்திவிட்டு அதை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ய இந்த வாலிபர் முயன்றார். ஸ்டூடண்ட் விசாவில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா வந்த இவர், அமெரிக்காவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஆட்களைத் திரட்டி வந்ததாக எப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறு இவர் கூட்டாளிகளை சேர்த்தபோது அதில் எப்.பி.ஐ உளவாளி ஒருவரும் இவருடன் இணைந்து அவரது செயல்களை கண்காணிக்க ஆரம்பித்தார். அல்-கொய்தா ஆதரவு அமைப்பினருடன் தொடர்பில் இருந்த இவரை சி.ஐ.ஏ வும் கண்காணித்து வந்தது.

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு நடத்த இவருக்கு சி.ஐ.ஏ வும் எப்.பி.ஐ யும் வேண்டிய உதவிகளைத் தருவது போல நடித்தன. பணம் கூட தரப்பட்டுள்ளது.

நபீஸை கடந்த ஜூலை மாதத்தில் தான் எப்.பி.ஐ உளவாளி முதன்முதலில் சந்தித்துள்ளார். இதையடுத்து பலமுறை சந்திப்பு நடந்துள்ளது. அப்போது நடந்த உரையாடல்கள் அனைத்தும் ரகசியமாக டேப் செய்யப்பட்டதோடு, அவரது இ-மெயில்கள், தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்பட்டு வந்துள்ளன. அப்போது தான் நபீஸ் மிக மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது உறுதியானதாக எப்.பி.ஐ கூறியுள்ளது.

முதலில் தற்கொலைத் தாக்குதல் நடத்த நபீஸ் திட்டமிட்டதாகவும் பின்னர் அதிலிருந்து பின் வாங்கியதாகவும், இதையடுத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுவெடிப்பை நடத்தலாம் என்று தங்களது உளவாளியே ஆலோசனை தந்ததாகவும் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை நபீஸுடன் எப்.பி.ஐ உளவாளியும் சேர்ந்து ஒரு வேனில் வெடி மருந்துகளை நிரப்பிக் கொண்டு, அதை ஒரு செயல்படாத டெட்டனேட்டருடன் இணைத்துக் கொண்டு நியூயார்க் ரிசர்வ் வங்கி கட்டடத்தின் முன் அதை நிறுத்தியதாகவும், பின்னர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு இருவரும் சென்று இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை விளக்கி நபீஸ் பேசும் ஒரு வீடியோவையும் பதிவு செய்ததாகவும் இதன் பின்னர் செல்போன் உதவியோடு டெட்டனேட்டரை வெடிக்கச் செய்ய நபீஸ் திரும்பத் திரும்ப முயன்றதாகவும், ஆனால், குண்டு வெடிக்காமல் அவர் திகைத்துக் கொண்டிருந்தபோது அவரை தங்களது அதிகாரிகள் கைது செய்ததாகவும் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அசான் நபீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தீவிரவாதத்தை எதிர்க்கும் நபர்கள் கூட இவ்வாறு அரசால் ரகசியமாக, தவறாக ஊக்குவிக்கப்பட்டு தீவிரவாதத்துக்குத் திரும்பும் அபாயம் இருப்பதாக புகார் கூறப்பட்டது. ஆனால், இதை எப்.பி.ஐ மறுத்தது. அவரது போக்கிலேயே போனதால் தான் தீவிரவாத சதி குறித்தும், இவருக்கு உதவிய நபர்கள் குறித்தும் முழு விவரங்களைப் பெற முடிந்ததாக எப்.பி.ஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்