முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிக்க வந்தவர்கள் பெயர் இல்லாததால் வெறுத்துப்போன வாக்காளர்கள்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.14 - தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்தலில் பரவலாக வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக இருந்தது. இதில் சென்னையில் ஆர்வமாக வாக்களிக்க வந்த பலரது பெயர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் வைத்திருக்கும் லிஸ்டில் இல்லை என மறுத்து திருப்பி அனுப்பியதால் வாக்காளர்கள் பலர் வெறுத்து திரும்பினர்.

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணி முதற்கொண்டே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத்துவங்கிவிட்டனர். ஆனால் வாக்குச்சாவடிக்கான தேர்தல் அதிகாரிகள் காலை 8 மணிக்குப்பிறகே வந்தனர். அதன்பிறகு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் வரவில்லை என மேலும் ஒரு அரைமணி நேரம் தாமதமாகி பிறகு 8.30 மணிக்கு பிறகுதான் வாக்குப்பதிவு துவங்கியது. 

அதே போல் சிட்கோ நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு துவங்கியதும் அங்கிருந்த வாக்குச்சாவடியில் இருந்த ஒரு எந்திரம் பழுதடைந்து இதனால் ஒரு மணி நேரம் கால தாமதமானதாக இங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகர் சென்னை துவக்கப்பள்ளி மற்றும் டான்போஸ்கோ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பலருக்கு வாக்கில்லை என திருப்பி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை காட்டிய பின்னரும், புதிதாக வெளியிடப்பட்ட லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாது என மறுத்துவிட்டனராம்.

இதுபோல் சென்னை நகர் முழுவதும் பல இடங்களில் வாக்காளர்கள் தங்களது பழைய வாக்காளர் அட்டையை காட்டியபின்னரும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால், பலர் ஆர்வமாக வாக்களிக்க வந்து, ஓட்டுப்போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும் ஒருசிலர் கூறும்போது, புதிய வாக்காளர் அட்டை வழங்கும்படி விண்ணப்பித்ததில் சிலருக்கு புதிய அட்டை கிடைத்துள்ளது, சிலருக்கு கிடைக்கவில்லை என கூறினர். அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தில் 2,3 பேருக்கு விண்ணப்பித்தபோது அதில் ஒருவருக்கு மட்டும் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை என்றனர்.

இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் முதன்முதலாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர். கென்னடி சதுக்கத்தில் உள்ள பாலாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு அறவே இல்லை. பெயரளவுக்கு ஒரு பெண் காவலரும், ஊர்க்காவல் படை வீரர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

ஆனால், அதே சமயத்தில் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என எதிர்பார்க்கப்பட்ட அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தேர்தல் மிக அமைதியாகவே நடைபெற்றது.

தேர்தல் கமிஷனின் கடும் கட்டுப்பாட்டாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பாலும், பொதுமக்களில் பலர் திருப்தி அடைந்து  வாக்களிக்க பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்ததை நேரடியாக காண முடிந்தது. அதிலும் இதுவரை தேர்தலில் அவ்வளவாக கவனம் செலுத்தாக பணக்காரர்கள் கூட, தங்களது கார்களில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து பல மணி நேரம் கொளுத்தும் வெயிலிலும் காத்திருந்து வாக்களித்தது, தமிழகத்தில் வாக்காளர் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்