முக்கிய செய்திகள்

மதுரை மீனாட்சிக்கு இன்று பட்டாபிஷேகம்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
13uma9

மதுரை,ஏப்.14 - மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. எட்டாம் நாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமியுடன் பிரியாவிடை கோவில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியுடன் பிரியாவிடை நந்திகேசுவரர் வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிகின்றனர். கீழச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து மேலமாசி வீதி திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆதினம் கட்டுச்செட்டி மண்டலகப்படியில் எழுந்தருளுகின்றனர். பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி கோயிலுக்கு வருகின்றனர். அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மாலை 6.05 மணியில் இருந்து இரவு 6.29 மணிக்குள் துலாம் லக்னத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.  சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்சமுத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்பட்டும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும். பின்னர், பல சாதிகற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும்.இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். நாளை அம்மன் திக்குவிஜயம் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: