ஸ்பெக்ட்ரம் விவகாரம் - அ.தி.மு.க. ஓயப்போவதில்லை - பி.எச்.பாண்டியன்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்

மேட்டுப்பாளையம்,பிப்.21  - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைவரும் கைதாகும் வரை அ.தி.மு.க. ஓயப்போவதில்லை என்று மேட்டுப்பாளையத்தில் பி.எச். பாண்டியன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருத்தி, பட்டு நூல் ஏற்றுமதியை தடுக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ம. வேலுச்சாமி, தா. மலரவன், ஓ.கே. சின்னராசு, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் கண்டன உரை நிகழ்த்தினர். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மார்க்கெட் பகுதிகளில் நகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. மின்மயான பணிகளை நிறைவேற்றத் தவறியது, மேலும் மத்திய, மாநில அரசின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவற்றை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.எச். பாண்டியன் கூறியதாவது,
வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய அனைவரும் சிறையினுள் தள்ளப்படப் போவது உறுதி. இவ்விவகாரத்தில் லாபமடைந்த முக்கிய நபர்கள் அனைவரும் கைது செய்யப்படும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை. 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என கைது செய்யப்பட்ட சத்யம் நிறுவன ராஜூ இன்று வரை சிறையில் இருந்து வெளிவர இயலவில்லை எனும் போது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேட்டிற்கு எப்போது சிறையில் இருந்து வர முடியும் என நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.
தி.மு.க.வின் இந்த உலக மகா ஊழலால் தமிழக மக்கள், தமிழக அரசு, தமிழக சட்டமன்றம், இந்திய பாராளுமன்றம் மொத்தத்தில் இந்தியாவே தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று திருச்சியில் நடந்த ஒரு நீதிமன்ற விழாவில் தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் முன்னிலையில் பேசியது குறித்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது.
அதில் நீதிமன்ற பணிகளில் பொதுப்பணித்துறை 60 சதவீத பணிகளையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டிட பணிகளில் கமிஷன் பெறாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக தலைமை நீதிபதியே அனைவரின் முன்னிலையிலும் பேசியுள்ளார். ஆகவே இங்கு நடைபெறும் அனைத்து பணிகளும் கமிஷன் மூலமாகவே நடைபெறுகிறது என அரசுக்கு வேதனையுடன் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் ஏறும் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.பி. ராஜூ, எல். சுலோசனா மற்றும் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் மைதீன்சேட், நிர்வாகிகள் பி.ஆர்.சி. அருண்குமார், ராஜ்குமார், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், காட்டூர் செல்வராஜ், இளைஞரணி ராஜ்குமார், மருத்துவரணி டாக்டர் கணேசன், கிருஷ்ணசாமி, சிவசாமி, வேணுகோபால், ஜெயராமன்,இந்திராணி, மணிமேகலை மகேந்திரன், பழனிச்சாமி, ரேணுகாராஜன், ஆறுமுகசாமி, நாசர், பாலன், சந்தானம், வெள்ளியங்கிரி உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி. கந்தசாமி நன்றி கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: