முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலுவுக்கு கல்தா - சோனியா முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.18 - தன்னிச்சையான செயல்பாடு காரணமாக தங்கபாலுவின் பதவி பறிபோகிறது. தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், அடிதடி, அறிக்கை போர் என்று எல்லாம் நடக்கும். தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே நகைப்புக்குரிய ஒரு தலைவர் இருந்தது கிடையாது. காமராஜர் முதல் பல்வேறு தலைவர்கள் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மனைவிக்கு ஓட்டு இருப்பது கூட தெரியாத ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உள்ளார் என்றால் அது தங்கபாலுவாகத்தான் இருக்க முடியும்.

கூட்டணி கட்சி என்ற முறையில் நட்பு பாராட்டுவது நாகரீகம். ஆனால், கூட்டணி கட்சியான தி.மு.க.விலேயே ஒரு கோஷ்டி தலைவராக மாறியது தான் தங்கபாலுவின் சாதனை.

5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒட்டி உறவாடி மக்களைப்பற்றி கவலைப்படாத தங்கபாலு, தி.மு.க. தலைமையின் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார். தமிழக காங்கிரசின் எந்த கோஷ்டியும் தங்கபாலுவை கண்டு கொண்டதில்லை. ஆனாலும் தங்கபாலுதான் தலைவர்.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி பற்றி பேசப்பட்ட ஐவர் குழுவில் பிரச்சனைக்குரிய இளங்கோவன் போன்றோரை இடம்பெறாமல் செய்தார்.

பின்பு, தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நடந்தபோது தி.மு.க.வை ஊழல்கட்சி என்று விமர்சித்தார். மறுநாள் சேர்ந்தவுடன் வெற்றி கூட்டணி என்றார். கூட்டணியில் 63 தொகுதிகள் முடிவானதும் வேட்பாளர் ஒதுக்குவதில் ஐவர் குழுவை கலந்தாலோசிக்காமல் தனியொருவராக 63 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு செய்தார். இவரது பட்டியலை நிராகரிக்க வேண்டுமென்று சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் உள்ளிட்டோர் சோனியாவிடம் முறையிட்டனர்.

ஆனாலும், தங்கபாலுவின் பட்டியல் வெளியானது. அதன்பிறகு தான் தமிழக காங்கிரஸில் வெட்டு, குத்து அதிகமானது. போட்டி வேட்பாளர்கள், மோதல், மறியல், கொடும்பாவி எரிப்பு என தொடர்ந்தது. தேர்தல் முழுதும் இந்த போராட்டங்கள் தொடர்ந்து, வாக்குப்பதிவு வரையும் கூட நீடித்தது. இதனால் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் தனது கட்சிக்குள் உள்ள போட்டி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.

தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே போய், தனது மனைவியை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். டம்மி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான தன் பெயரையே முன்மொழிந்துகொண்டார். மனைவியின் படிவத்தை சரிவர நிரப்பாததால் தள்ளுபடி ஆகி, டம்மி வேட்பாளர் தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். இதே போல் கிருஷ்ணகிரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குழப்பம். ஒரு தலைவர் சட்டசபை தேர்தலில் நிற்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது.

தேர்தல் பிரச்சாரத்தில் சிதம்பரம், வாசன், இளங்கோவனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக கராத்தே தியாகராஜன் உள்பட 18 பேர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு தங்கபாலு நீக்கினார்.

இது கட்சி விரோத செயல். நீக்குவதற்கு தங்கபாலுக்கு உரிமை இல்லை என்று அனைவரும் குரல் கொடுத்தனர். நீக்கப்பட்டவர்களில் வாசன், சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐவர்குழுவில் இருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கட்சி விதிகளை காரணம் காட்டி தங்கபாலு கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். யாரையும் நீக்க தங்கபாலுக்கு உரிமையில்லை. வேட்பாளர் தேர்விலும் தங்கபாலு தன்னிச்சையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

தமிழக காங்கிரஸ் தி.மு.க.விடம் 63 இடங்களை போராடி பெற்றது. அதை ஒழுங்காக அறுவடை செய்யாமல் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி செய்ததால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 8 இடங்கள் பெற்றால் பெரிய விஷயம் என்ற செய்தி சோனியாகாந்தி வரை எடுத்து சொல்லப்பட்டு இருப்பதால் தங்கபாலுவை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துவிட்டாராம்.

தேர்தல் முடிவும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதால் இனியும் தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக்கொள்ள சோனியா விரும்பவில்லை. ஆகவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அது ஜி.கே.வாசன் அல்லது சுதர்சன நாச்சியப்பனாக இருக்கலாம் என்ற கருத்து காங்கிரசுக்குள் ஓடுகிறது.

எது எப்படி இருந்தாலும் தங்கபாலுவுக்கு கல்தா உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. உடனே அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்