முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவக் கல்லூரிகள் மேம்பாட்டிற்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.20 - மருத்துவக் கல்லூரிகள் மேம்பாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நலமான நாடே வளமான நாடாகும்.  மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு  அடித்தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியமாகும். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அனைவரும்  பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு  செயல்படுத்தி வருகிறது. 

நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவசர மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும்  அளிக்கப்பட்டுள்ளன.  இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மருத்துவ நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், பழுதுபார்த்தல், புதிய மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 15 வட்டம் சாரா மருத்துவமனைகளில் பல் மருத்துவப் பிரிவு இயங்கி வருகின்றன.  மேலும் பல் பராமரிப்பின் அவசியத்தை கிராம மக்களுக்கு உணர்த்தும் வகையில் 22 வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் 208 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பல் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 14 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவக்   கல்லூரி மற்றும்    மருத்துவமனைக்கென    புதிய     அடுக்குமாடிகள் கொண்ட கட்டடம் சமீபத்தில் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒரு ஒப்புயர் மையமாக தரம் உயர்த்துவதற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், புதிதாக மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும்  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார். மேலும்,  மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35-​லிருந்து 58 ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும்  3 மருத்துவம் சாரா பணியிடங்களை   தோற்றுவிக்க அனுமதி அளித்ததுடன், இந்த பணிகளுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார்.

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் பழமையானதாகவும்,  போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் உள்ளன.   இதனால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே, இக்கல்லூரி வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில்  7681 சதுர அடியில் 3 நிலைகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்ட  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இந்த அடுக்குமாடி கட்டடத்தில் தரைதளத்தில் நிர்வாக அலுவலகமும், முதல் தளத்தில் உடற்கூறு ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறையும், இரண்டாம் தளத்தில் நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறையும், மூன்றாம் தளத்தில் தேர்வு கூடம் மற்றும் அவைகூடம்  ஆகியவைகள் இடம் பெறும்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. திருநெல்வேலி மாநகராட்சி வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைத்திட  தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக  மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்கிடும் திட்டத்திற்கு   6 கோடியே 55 லட்சம் ரூபாயும் மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு செலவுக்கு 12 லட்சத்து 37ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். 

தற்போதைய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இத்தகைய சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமையினாலும் மற்றும் குடும்ப சூழ்நிலைக் காரணமாகவும் மனதளவில் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரின் பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்திற்கு 

ஒரு மனவள ஆலோசனை மையம் என்று 31 மாவட்டங்களிலும், சென்னையில் 3 மையங்கள் என 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த 2 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து    தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony