முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி சோதாவுக்கு எதிர்ப்பு: முதல்வர் பிரதமருக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.20 - கூட்டாட்சி முறைக்கு விரோதமான நிதி மசோதாவின் 7 வது பிரிவை நீக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:-

மக்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மசோதாவின் 7வது பிரிவு கூட்டாட்சி முறைக்கு எதிராக உள்ளது. இந்த சட்டப்பிரிவு வருமான வரிச்சட்டம் 40 வது பிரிவில் மாற்றம் செய்து, மாநில அரசுகள் எந்தவிதமான வரியையும் குறிப்பாக தனி உரிமை வரி, உரிமம் வரி, ராயல்டி வரி போன்றவைகளை பொதுத்துறை நிறுவனங்களிடம் வருமான கழிவுகளின்றி வசூலிக்க வகை செய்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு  சட் டத்தின் 265 வது பிரிவில்  7 வது சரத்துப்படி இதுபோன்ற வரிகளை அரசின் பொதுத்துறை  நிறுவனங்களின் வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்வதற்கு வருமான வரிச்சட்டம் 37வது பிரிவிலும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

தற்போது  தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மசோதாவின் 7 வது சரத்துப்படி இதுபோன்ற வரிவிதிப்புகளை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியாததாகி விடுகிறது. இதன் மூலம் மாநில அரசுகளின் வரியற்ற வருவாயில் இருந்து மத்திய அரசு தனது வருவாயை பெருக்கிக் கொள்ள வழிசெய்யப்பட்டு இருக்கிறது.

மாநில அரசுகளின் வருமானத்தின் மீது மறைமுக வரிவிதிப்பு அரசியல் சட்டத்தின் 289 வது பிரிவுக்கு  விரோதமானதாகும். இந்த சட்டப்பிரிவின் படி, மாநில அரசுகளின் வருமானம் மற்றும் சொத்துக்கள் மீது மத்திய அரசு வரிவிதிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சரத்தின்படி எந்தவிதமான வரிகளுக்கு வருமானத்தில் இருந்து கழிவு செய்து கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பை தடுத்து அரசின் வரி அடித்தளத்தை  வலுப்படுத்துவதற்கு பதிலாக, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான  வரிவிதிப்பு அதிகாரங்களை பறிக்க முயற்சி செய்திருப்பது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது ஆகும்.

மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சட்டப்பூர்வமான செலவீனங்கள், அறிவிக்கப்பட்ட வருமானங்கள், மத்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் ஆய்வுக்கு உட்பட்டது. அந்த அறிக்கைகளை மாநில சட்டமன்றங்களில் ஆய்வு செய்ய அனுமதி மறுப்பது தவறான வழிகாட்டுதல் என்பதோடு, கூட்டாட்சி கொள்கையில் இதற்கு இடமில்லை. எனவே, நிதி மசோதாவின் 7வது சட்டப்பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்குவதற்கு முன் இதை செய்ய வேண்டும். இவ்வாறு  முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்