இந்தியா - எகிப்து இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 21 - இந்தியாவும், எகிப்தும் பாதுகாப்பான இணையதள தொழில்நுட்பம் உட்பட 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. எகிப்தில் 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அங்கு முதன் முறையாக ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக மோர்ஸி பொறுப்பேற்றார். அவர் இப்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த அவர், இரு தரப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். அப்போது இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையில் சைபர் எனப்படும் இணைய தள தொழில்நுட்ப பாதுகாப்பு, எகிப்தின் அல் அசார் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மையம் ஒன்றை அமைப்பது, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, புராதன பொருட்கள், சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுப்பது ஆகியவை உட்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தரப்பு ஒத்துழைப்புக்கான துறைகளை இனம் காண்பதற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்த சந்திப்புக்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து போது பிரதமர் கூறுகையில், அதிபர் மோர்ஸியும் நானும் விரிவான முறையில் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தினோம். எகிப்தில் புதிய ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் அந்நாட்டு மக்களின் வீரம் மற்றும் தியாகம் பாராட்டுக்குரியது. எகிப்தில் வெற்றிகரமான முறையில் நடைபெற்ற ஆட்சி மாற்றமானது அப்பகுதிக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே ஒரு உதாரணமாக அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: