முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.20க்கு 1 கிலோ அரிசி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை மார்ச்.22 - அரிசிவிலை உயர்வை கட்டுபடுத்தும் விதமாக தரமான அரிசி 1 கிலோ ரூ.20க்கு வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நிதிநிலை அறிக்கையில்  கூறியிருப்பதாவது: அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் - ஒரு முன்னோடித் திட்டம்

மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான முடிவு எத்தகையதாக இருப்பினும் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய  பொது விநியோகத் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.  அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்து, மாநிலத்திலிருந்து பசிப் பிணியை அறவே அகற்றும் வண்ணம், 2011 ஜுன் மாதத்திலிருந்து அரிசி பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா அரிசியை இந்த அரசு வழங்கி வருகிறது.  இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்விலிருந்து ஏழை எளிய மக்களைப் பாதுகாப்பதற்கான சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் மானிய விலையில் இந்த அரசு வழங்கி வருகிறது.  உணவு மானியத்திற்காக 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

பொது விநியோகத் திட்டத்தில் நல்ல தரமான அரிசி கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு அரிசி ஆலைகள் 26.27 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.  2013-2014 ஆம் ஆண்டில் இக்கழகம் மேலும் ஏழு அரிசி ஆலைகளை 32.6 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கும்.  நவீன அரிசி ஆலைகளின் திறனை உயர்த்துவதோடு, அரவை செய்து அளிக்கும் அரிசியின் தரத்தையும் இந்த நடவடிக்கைகள் உயர்த்தும்.

விலைவாசிக் கட்டுப்பாடு

அத்தியாவசியப் பொருள்களுடைய விலைகள் தொடர்ந்து உயரும் போக்கிற்கு, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எரிபொருள் விலை நிர்ணயக் கொள்கைகளே காரணமாகும்.  பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் முதன்மைப் பொருள்களின் விலையும் பாதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த இந்த அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:-

பொது விநியோகக் கடைகள் மூலமாக, துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கிலோ ஒன்றிற்கு 30 ரூபாய் என்ற விலையிலும், பாமாயிலை லிட்டர் ஒன்றிற்கு 25 ரூபாய் என்ற விலையிலும் இந்த அரசு விநியோகித்து வருகிறது.  இத்திட்டம் 31.3.2014 வரை நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அவசரக் காலங்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி விநியோகம் செய்வதற்காக 50 கோடி ரூபாய் அளவில் விலை நிலைப்படுத்தல் நிதி ஒன்றினை இந்த அரசு ஏற்கெனவே அமைத்துள்ளது.  இந்த நிதியின் அளவு 100 கோடி பொயாக உயர்த்தப்படும்.

அரிசி விலையைக் கட்டுப்படுத்த, அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக ஒரு இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் என்ற விலையில் வெளிச்சந்தையில் விற்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

காய்கறி விலையைக் கட்டுப்படுத்த, நகர்ப்புறப் பகுதிகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலமும் தோட்டக்கலைத் துறை மூலமும் விவசாயிகளையும் நுகர்வோரையும் நேரடியாக இணைக்கக்கூடிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள்  திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்