முக்கிய செய்திகள்

காமன்வெல்த் ஊழல்: டெல்லி முதல்வர்-கவர்னர் மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஊழல்
Sheela Dixist

 

புது டெல்லி,ஏப்.27 - டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதில் ரூ. 1,250 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக டெல்லி முதல்வர் மற்றும் கவர்னர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி அமைப்பு குழு தலைவராக இருந்த கல்மாடி ஊழலில் முக்கிய பங்கு வகித்திருந்ததை சி.பி.ஐ கண்டுபிடித்தது அவர் போட்டிக்கு தேவையான பொருட்களைவாங்கியதிலும் லண்டனில் காமன்வெல்த் ஜோதி ஓட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததிலும் ஊழல் செய்திருந்தார். இது தொடர்பாக பல கட்டங்களாக விசாரணை செய்த சி.பி.ஐ. நேற்று முன்தினம் அவரை கைது செய்தது. அவர் நேற்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி கவர்னர் திசேந்திர கண்ணா ஆகியோர் மீதும் காமன்வெல்த் போட்டி முறைகேடு தொடர்பாக புகார் கூறப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தனியாக ஒரு விசாரணை குழுவை அமைத்தார். இந்த குழுவுக்கு வி.கே. சுங்லு தலைமையேற்று என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்பது குறித்துவிசாரணை செய்து பிரதமரிடம் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கல்மாடி பல்வேறு முறைகேடுகளை செய்ததை சுட்டிக் காட்டியிருந்த அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கவர்னர் திசேந்திர கண்ணா ஆகியோர் பெரிய அளவில் பண இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். 

டெல்லி மாநில அரசு போட்டிக்கானகட்டுமான பணிகளை செய்வதற்கு சரியாக திட்டமிடவில்லை. இதனால் டெல்லி அரசுக்கு ரூ. 1,250கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது. இந்த இழப்புக்கு கட்டுமான பணிகளை ஏற்பாடு செய்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்,கவர்னர் திசேந்திர கண்ணா மற்றும் அதிகாரிகள்தான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தவறான செயலால் காண்டிராக்டர்களுக்கு ரூ. 250 கோடி கூடுதல் லாபம் கிடைக்க செய்துள்ளனர். கட்டுமான பணிகளை தாமதப்படுத்தியதால் 800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேவையே இல்லாமல் சில பணிகளை செய்து அரசுக்கு ரூ. 574 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அறிக்கையில் முதல்வருக்கும், கவர்னருக்கும் நேரடியாக புகார் கூறப்பட்டுள்ளதால் அவர்கள் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தனை கோடி ரூபாய் இழப்புக்கு கவர்னரும், முதல்வரும் காரணமாக இருப்பதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்தி உள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் விஜயக்கோயல் கூறுகையில், இந்த ஊழலில் கல்மாடியை மட்டும் கைது செய்து  விட்டு இதில் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் சிலரை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது. கவர்னர் திசேந்தர்கண்ணா, முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோர் தவறுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: