முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட கல்மாடிக்கு 8 நாட்கள் சி.பி.ஐ. காவல்

Suresh Kalmadi1

 

புதுடெல்லி,ஏப்.27 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடியை 8 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுரேஷ் கல்மாடியை கோர்ட்டிற்கு அழைத்துச்செல்லும் போது அவர் மீது அங்கு கூடியிருந்த கும்பலில் ஒருவர் கல்வீசி தாக்கினார்.

டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் நாடுகளுக்கிடையான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்ததில் ரூ. நூற்றுக்கணக்கான கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. லண்டனிலிருந்து டெல்லிக்கு ஜோதி கொண்டுவந்தது டெல்லி நகரை அலங்காரம் செய்தது, விளையாட்டு வீரர்களுக்கு கட்டிடங்கள் கட்டுவதிலும் பெரும் அளவு ஊழல் நடந்துள்ளது. அரங்கம் அமைப்பது, விளையாட்டு மைதானங்களை சமப்படுத்தியது, சாலை அமைத்தது ஆகியவைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கு காரணம் காமன்வெல்த் போட்டி அமைப்பு கமிட்டி தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி மற்றும் கமிட்டியின் உறுப்பினர்கள் சுரிஜீத் லால், (இவர் இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினராகவும் உள்ளார்) மற்றும் இணை இயக்குனர் ஜெனரல் பிரசாத்(விளையாட்டு) ஆகியோர்கள்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனையொட்டி அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் விசாரணையும் நடத்தினர். இதில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் சுரேஷ் கல்மாடி, சுரிஜித் லால், பிரசாத் ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம்  கைது செய்தனர். அவர்கள் மூவரையும் நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது காமன்வெல்த் முறைகேடுகள் தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 14 நாட்கள் சி.பி.ஐ. காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்கப்பட்டது. ஆனால் 8 நாட்கள் மட்டும் சி.பி.ஐ. காவலில் வைக்க நீதிபதி தல்வந்த் சிங் அனுமதித்து உத்தரவிட்டார். சி.பி.ஐ. காவலின்போது கல்மாடி மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது மேலும் பல ஊழல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் சுரேஷ் கல்மாடி இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகி இருப்பதால் அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டதையொட்டி அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்டதும் அவரது எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியை தாங்க முடியாமல் ரகளையில் ஈடுபட்டனர். கல்மாடியின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். புனே நகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள சுரேஷ் கல்மாடியின் அறையையும் தாக்கினர். அதிலிருந்த தட்டுமுட்டு சாமான்களையும் அடித்து நொறுக்கினர். புனே நகரில் இருந்து 3 முறை லோக்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் கல்மாடி. மேலும் ராஜ்யசபை உறுப்பினராக 4 முறை இருந்துள்ளார். அதாவது கடந்த 30 ஆண்டுகளாக அவர் எம்.பி.யாக இருப்பதோடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக திகழ்ந்துள்ளார். ஊழல்வாதிகள் விஷயத்தில் காங்கிரஸ் பொருமையாக இருக்காது. அதனால் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டது இயற்கையானது என்று புனே நகரின் காங்கிரஸ் கிளை முக்கிய தலைவரான மோகன் ஜோஷி எம்.எல்.சி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். முன்னதாக சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்ற போது அங்கு கூடியிருந்த ஒரு கும்பலும் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக ரகளையில் ஈடுபட்டனர். கும்பலில் இருந்த ஒருவர் கல்மாடி மீது கல்வீசி தாக்கினார். உடனே அந்த நபரை சி.பி.ஐ. அதிகாரிகள், பாதுகாவலர்கள் ஆகியோர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: