முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் கலவரம்: 10 பேருக்கு தூக்கு விதிக்க கோரும் மோடி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத், ஏப். 18 - குஜராத் கலவர வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திர மோடி அரசு திடீர் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள் 2002 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

தற்போது 7 மாதங்களுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு திடீரென ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த வழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி ஆளும் நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்காக மாநில அரசு, மூன்று நபர் சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. 

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் நேற்று ஐகோர்ட்டில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக தம்மை பா.ஜ.க. முன்னிறுத்தினாலும் குஜராத் கலவரங்களை காரணம் காட்டி தம் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நரேந்திர மோடி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மாயா கோட்னானியைப் பொறுத்தவரையில் மோடியின் மிக நெருங்கிய ஆதரவாளர்தான். ஆனாலும் தம் மீதான கறையைத் துடைத்தாக வேண்டிய நிலையில் மாயா கோட்னானியை பலி கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறார் மோடி என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்