முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பெண் ஊழியர் கொலை - 8 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.27 - மதுரையில் மருந்துக்கடை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தகர பெட்டியில் வைத்து வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக செல்போனில் பேசிய 8 பேர் பிடிபட்டுள்ளனர்.

  மதுரை விராட்டிப்பத்து இருளாண்டித்தேவர் காலனி முல்லை நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா(23) இந்த பகுதியில் உள் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. கடந்த வாரம் புதன்கிழமை மதியம் மருந்துக்கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்ற போது லதா மாயமானார். இது குறித்து கணவர் குணசேகரன் எஸ்எஸ்காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உடனடியாக புகாரை வாங்காமல்  3 நாட்கள் கழித்தே புகாரை பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேனி ரோடு செக் போஸ்டில் இருந்த போலீசாரிடம் சிலர் வந்து மாடக்குளம் செல்லும் கால்வாயில் பழைய தகர பெட்டியில் இருந்து பிணவாடை வருகிறது என தெரிவித்தனர்.

   இதைதொடர்ந்து செக்போஸ்டில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பெட்டிக்குள் இளம்பெண் ஒருவரது உடல் மடக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முகம் சிதைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற டாப்ஸ், பச்சை நிற சுடிதார் ஆடை அணிந்திருந்தார். கைகால்கள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்ட நிலையில் ஒரு கையில் வெட்டுக்காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ அவரை கொலை செய்து தகர பெட்டிக்குள் வைத்து கால்வாயில் வீசி இருப்பது தெரியவந்தது. இது குறித்து எஸ்எஸ்காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நட.த்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். காணாமல் போன லதாவாக இருக்கலாம் என்று கருதிய போலீசார் அவரின் உறவினர்களை வரவழைத்து பிணத்தை பார்க்க செய்தனர். கொலையான பெண் அணிந்திருந்த உடைகள் மற்றும் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை பார்த்து  கொலை செய்யப்பட்ட பெண் லதாதான் என்று உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்டு 4 நாட்களுக்கு மேலாகி விட்டதால் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.

    இதை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார்  கொலையாளிகளை தேடத்துவங்கினர். வழக்கமாக காலை 6 மணிக்கு வேலைக்கு செல்லும் கணவர் குணசேகரன் மாலை மூன்றரை மணிக்குத்தான் வீடு திரும்புவார். இதே போல் காலை 10 மணிக்கு மருந்துக்கடைக்கு செல்லும் லதா மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு  மீண்டும் 4 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புவார். ஏப்.20 ம் தேதி கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது ஒரு ஆட்டோவில் ஏறி லதா சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த பகுதி ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் லதாவின் செல்போனில் கடைசியாக பேசிய 8 பேரின் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் இளம் பெண்ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!