முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மரியாதையுடன் சாய்பாபாவின் உடல் அடக்கம்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புட்டபர்த்தி, ஏப்.28 - புட்டபர்த்தி சத்ய ஸ்ரீசாய்பாபாவின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட ஸ்ரீசாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் குல்வந்த் ஹாலில் செவ்வாய்க்கிழமை இரவுவரை வைக்கப்பட்டிருந்தது. உலகெங்குமிருந்து லட்சக்கணக்கான அவரது சீடர்களும், பக்தர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுவரை பக்தர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். 

சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய மந்திரி அம்பிகா சோனி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, கவாஸ்கர் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 

நேற்று காலை சாய்பாபாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் துவங்கின. சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் வைதீக முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்தார். சர்வ மதத்தை சேர்ந்தவர்கள் சர்வமத உடல் அடக்க பிரார்த்தனைகளை நடத்தினர். இதன் பிறகு சாய்பாபாவின் உடல் நவரத்தினங்கள் கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடல் மீது புனித நதிகளின் நீர் தெளிக்கப்பட்டது. 

சாய்பாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் பாபா போதனை செய்யும் இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது புட்டபர்த்தி முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் பாபாவிற்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆந்திர கவர்னர் நரசிம்மன்,  ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி,  கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வெங்கையா நாயுடு, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சிவராஜ்பாட்டீல் மற்றும் ஏராளமான தலைவர்கள் திரண்டுவந்து கலந்துகொண்டனர். 

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் குல்வந்த் ஹாலில் 1500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அனைவரும் பாபாவின் இறுதிச் சடங்குகளை பார்க்கும் விதத்தில் புட்டபர்த்தியின் பல பகுதிகளிலும் ராட்சத டி.வி.க்கள் வைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன. பக்தர்கள் கண்ணீர் மல்க அந்த நிகழ்ச்சிகளை பார்த்து அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள். 

கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆசிரமத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவிற்கு சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் தூரத்திற்கு மனித தலைகளாகவே காணப்பட்டது. வாகனங்கள் 5 கி.மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு பக்தர்கள் அங்கிருந்து நடந்தே ஆசிரமத்தை அடைந்தனர். மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மதத்தினரும் சாய்பாபாவின் இறுதிச் சடங்கு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்