முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா மரணம் இயற்கையானதே! ஆந்திர அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி,ஏப்.29 - கடந்த மாதம் 28 ம் தேதி புட்டபர்த்தி சத்தியசாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாபா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் சபையா தினமும் அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர், சாய்பாபாவின் உறுப்புகள் மருந்துகளை ஏற்று நன்றாக செயல்படுகின்றன. ஆனால் அவர் கவலைக்கிடமாக உள்ளார் என்று கூறினார். இது சாய்பாபா பக்தர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த 18 ம் தேதி தலித் ஜனசபை அமைப்பு தலைவர் தரம்சந்த் ஆந்திர மனித உரிமை ஆணையத்தில் சாய்பாபாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு சாய்பாபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். 

இதை விசாரித்த மனித உரிமை ஆணைய தற்காலிக தலைவர் பெத்தபெரி ரெட்டி, மாநில அரசு உரிய விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதற்கு விளக்கமளித்த அரசு, சாய்பாபாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தது. இந்நிலையில் சாய்பாபா கடந்த 24 ம் தேதி காலை மரணமடைந்ததையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்திற்கு சாய்பாபா மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதற்கு மாநில அரசு உரிய விளக்கமளித்து பொதுமக்களின் சந்தேகத்தினை தீர்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இதற்கு ஆந்திர மாநில தலைமை செயலாளர் ரமேஷ், மனித உரிமை ஆணையத்தில் விளக்கமளித்தார். அதில் சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மாநில அரசு அதிகாரிகள் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் விவரங்களை நேரடியாக கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். சாய்பாபாவின் சாவில் மர்மம் ஏதுமில்லை. அவரது மரணம் இயற்கையானதுதான். சில பக்தர்கள் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony