வாஷிங்டன், ஜூன். 9 - அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகையை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதிபர் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு தினசரி ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே அதிபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் ரிசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு (எப்.பி.ஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் நியூயார்க் மேயர் மிச்சல் புளூம்பெர்க் அலுவலகத்துக்கு வந்த கடிதத்திலும் விஷம் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கும், நியூயார்க் மேயருக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன் (35) என்பது தெரிய வந்தது. கடந்த மே 20 ம் தேதி அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு அவரது கணவர் உதவியாக இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் எப்.பி.ஐ. போலீசார் நடிகை ஷான் ரிச்சர்ட்சனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது விஷம் தடவிய கடிதம் அனுப்பிய விபரம் தெரிய வந்தது. ஆனால் ரிச்சர்ட்சன் இதை மறுத்துள்ளார். இவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.