முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.6 - காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசானது 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடாமுயற்சியால் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரிநதிநீர் ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஒரு இடைக்கால ஏற்பாடக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மத்தியநீர்வளத்துறை செயலாளர் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் ஒரு இடைக்கால ஏற்பாடாக அமைக்கப்பட்டது. இந்த வாரியம் இரண்டுமுறை கூடியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதனையொட்டி தமிழகத்திற்கு கடந்தாண்டு கர்நாடகம் திறந்துவிட வேண்டிய 31.5 டி.எம்.சி. தண்ணீரையும் கடந்த ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 10 டி.எம்.சி. தண்ணீரையும் ஜூலை மாதத்தில் திறந்துவிட வேண்டிய தண்ணீரையும் கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பாக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. மேலும் வரும் நவம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை மாதாமாதம் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்தவழக்கு விசாரணை நேற்று நீதிபதி லோதா, உபோபாத்தியாயா ஆகியோர் கொண்ட பெஞ்சில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கர்நாடகத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது என்றார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர், பருவமழையை நம்ப முடியாது. திடீரென்று பெய்யும், அல்லது பெய்யாமல் போகும் என்றார். கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கை கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு இதுவரை 26 டி.எம்.சி. தண்ணீருக்கும் மேலாக வந்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 1.7 டி.எம்.சி. தண்ணீர்தான் வந்துள்ளது என்றும் கோர்ட்டில் எடுத்துரைக்கப்பட்டது. விவாதம் நடந்த பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவைகள் அமைப்பது குறித்து எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி இன்னும் 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony