தயாளு அம்மாள் உடல்நிலையை ஆய்வு செய்ய குழு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி: ஜூலை-11 -  ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு கோரிய திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் குழுமை அமைக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவி ஆதாயம் அடைந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் பங்குதாரரான தயாளு அம்மாள், சிபிஐ தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் நேரில் ஆஜராகி சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள், சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறிைடு செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகளும் தயாளு அம்மாளின் மனுவை விசாரிக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த திங்கள்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவை ஆய்வு செய்த நீதிபதி பி.சதாசிவம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதன்படி நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டு இருந்தது.

ஆனால் தயாளு அம்மாளின் மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி ராதாகிருஷ்ணன், ஸ்பெக்ட்ரம் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வியையும் உள்ளடக்கிய பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தயாளு அம்மாள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. நேற்றைய விசாரணையின் போது, தயாளு அம்மாளின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் 3 வார காலத்துக்குள் தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தயாளு அம்மாளுக்காக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: