ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.11 - ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்குமாறு சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த தயாநிதிமாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் மீதும் மற்றும் சிலர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஏர்செல் நிறுவனத்தை விலைக்கு பெற்றுக்கொண்ட் மேக்சிஸ் நிறுவனமானது சன் குழுமத்தில் ரூ.600 கோடி வரை முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும்

தயாநிதிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து ஓராண்டு காலமாகிறது. ஆனால் அதுதொடர்பாக சி.பி.ஐ. தனது விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் சிங்வி,கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது. அப்போது ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓராண்டு காலத்திற்கும் மேலாகிறது. அதனால் விசாரணையை  முடிக்குமாறு சி.பி.ஐ. நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது சி.பி.ஐ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது இந்த வழக்கின் சில பகுதிகளை விசாரிக்க ஏற்படும் செலவை சமாளிக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார். இந்த வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதியை சி.பி.ஐ. கோரியுள்ளது என்று தவறுதலாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதிகாரிகளையோ அல்லது தயாநிதிமாறனையோ விசாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: