முலாயம்சிங் - மகன்களை விடுவிக்க சி.பி.ஐ. முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.22 - சொத்துக்குவிப்பு புகாரில் முலாயம் சிங் யாதவ் மற்றும் மகன் அகிலேஷ் யாதவ் உள்பட 2 மகன்களை குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ. அறிவிக்க முடிவு செய்திருப்பதாகவும் இதுதொடர்பான அறிக்கை சுப்ரீம்கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசியல் செல்வாக்கு உடைய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றொரு மகன் பிரதீக் ஆகியோர் முறைகேடாக சொத்து குவித்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன்கள் ஆகியோர் முறைகேடாக சொத்துகுவித்திருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அந்த வழக்கில் இருந்து அவர்களை சி.பி.ஐ. விடுவிக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தாலும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் தஸ்தாவேஸ்தில் குற்றமற்றவர்கள் அதாவது அவர்கள் 3 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான தஸ்தாவேஜூகள் சி.பி.ஐ.இயக்குனருக்கும் வழக்கு பிரிவு இயக்குனருக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளது என்று விசாரணைக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையில் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவர்கள் மகன்கன் முறைகேடாக சொத்துக்குவித்திருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்திரப்பிரதேச மாநில வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி கூறுகையில் தமக்கு மத்திய அமைச்சர் ஒருவரிடமிருந்து மிரட்டல் வந்திருப்பதாகவும் அந்த அமைச்சர் யார் என்பதை சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். சுப்ரீம்கோர்ட்டில் நற்சான்றிதழ் அளித்து சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ள அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று அந்த அமைச்சர் மிரட்டியதாகவும் வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு முலாயம்சிங் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு நன்றிக்கடனாக சி.பி.ஐ. நற்சான்றிதழ் வழங்க உள்ளார் என்று பாரதிய ஜனதா குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் சி.பி.ஐ.யின் முடிவு குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் உணவு பாதுகாப்பு மசோதாவை தற்போது உள்ள நிலையில் எதிர்ப்போம் என்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். முறைகேடாக சொத்து சேர்த்திருப்பதாக முலாயம் சிங் மற்றும் அவரது மகன்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் சதுர்வேதி வழக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2007-ம் ஆண்டு சி.பி.ஐ.விசாரணையை தொடங்கியது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முலாயம்சிங் யாதவ் கூறுகையில் மத்திய அரசை எதிர்ப்பு கடினம். ஒருவரை சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ.யை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் பிறகு முலாயம் சிங்கிற்கும் அவரது மகன்களுக்கும் சி.பி.ஐ. நற்சான்றிதழ் வழங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிளுக்கு எதிராக வழக்கு தொடரும் நடவடிக்கையை வாபஸ் பெற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி வழக்கறிஞர் சதுர்வேதி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: