மும்பையை தகர்க்க தீவிரவாதிகள் ஊடுருவல் - எச்சரிக்கை

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை 23  - பீகார் புத்தர் கோவிலில் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அடுத்த தாக்குதலை விரைவில் நடத்த போவதாக எச்சரித்து இருந்தனர். இதையடுத்து உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மும்பையை தகர்க்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மும்பையில் அதிகபட்ச நாசத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் கைவரிசை காட்டுவதை முறியடிக்க மும்பை போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள்  மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இவை தவிர ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தப்புவதை தடுக்க இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பஸ்நிறுத்தங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மால்களில் எல்லா இடத்தையும் கண்காணிக்க ரகசிய கேமிரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று வியாபாரிகள், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். ஷாப்பிங் மால்களில் ஊழியர்களுக்கு அடையாளஅட்டை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மால்களில் சந்தேகப்படும்படி நடமாடுபவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: