முக்கிய செய்திகள்

அமுலாக்கப்பிரிவு அலுவலகத்தில் கனிமொழி-சரத்குமார் ஆஜர்

kanimozhi-Ajar3

புதுடெல்லி,மே.12 - டெல்லியில் உள்ள அமுலாக்கப்பிரிவு இயக்குனரக அலுவலக்த்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் நேற்று ஆஜரானார்கள். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக இவர்களிடம் நாளை 13 ம் தேதி அமுலாக்கப்பிரிவு விசாரணை நடத்த இருந்தது. ஆனால் அந்த தேதியை மாற்ற வேண்டும். வேரொரு நாளில் விசாரணை நடத்தவேண்டும் என்று இருவரும் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் கனிமொழி இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனக்கு இருக்கும் நேரப்பிரச்சினை காரணமாக 13-ம் தேதி தன்னால் ஆஜராக முடியாது என்று கனிமொழியும் சரத்குமாரும் டெல்லி மண்டல அமுலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்து தங்கள் நிலைமையை விளக்கினர். இதை அமுலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர். வேறொரு தேதியில் இவர்கள் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக இருக்கிறார்கள். இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை வரம்பிற்குள் இருக்கும் இவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்த மனு மீதான தீர்ப்பு சுப்ரீம்கோர்ட்டில் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதாவது தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மறுநாள் இவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்பது தெரிந்துவிடும். 

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கனிமொழி,சரத்குமார் இருவரும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கலைஞர் டி.விக்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக அப்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமுலாக்கப்பிரிவும் இவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து நேற்று அவர்கள் ஆஜரானார்கள். அப்போது 13-ம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் தஙக்ளை விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: