முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கு 1300 அரசு ஊழியர்கள்

வியாழக்கிழமை, 12 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.12 - சென்னை சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் 1300 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சில தொகுதிகளின் முடிவுகள் தாமதமாக வெளிவரும். என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் 210 டேபிள்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்ற முறையில் எண்ணிக்கையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் அதிகமுள்ள தொகுதிகளுக்கு ஏற்ற முறையில் டேபிள்கள் அமைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை  சுற்றுகளும் இதையொட்டி மாறும். மொத்தம் 254 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கொளத்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு அதிக சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர், கண்காணிப்பாளர், ஒரு வீடியோ கிராஃபர், ஒரு உதவியாளர் உட்பட 4 பேர்கள் இருப்பார்கள். மொத்தம் 16 தொகுதிகளில் 1050 அரசு ஊழியர்கள் நேரடியாகவும், பிற அலுவல்களுக்கு 250 அரசு ஊழியர்கள் உட்பட 1300 பேர் வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுவார்கள். 

தேர்தல் முடிவுகள் வெளிப்படையான தன்மையுடன் இருக்கவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அதே படிவங்கள் வாக்கு எண்ணிக்கையின் போதும் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கண்காணிப்பாளர் மற்றம் தேர்தல் அலுவலரிடம் காண்பிக்கப்பட்டு அவர்களுடைய ஒப்புதலுக்கு பிறகு அவரின் கையொப்பத்தை பெற்றபின் அறிவிக்கப்படும். 

செய்தியாளர்களுக்கு உள்ள தனி அறையில் இதற்கான அலுவலர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும் முறைப்படி வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள கரும் பலகையில் வாக்கு சுற்று எண்ணிக்கை விபரம் எழுதி வைக்கப்படும். இவைகள் அனைத்தும் கணினியில் பின்பு பதிவு செய்யப்படும். செய்தியாளர்கள் அறையில் செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வாக்குகள் நடத்தும் இடத்தை செய்தியாளர்கள் பார்வையிட அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் அனுமதியுடன் பார்வையிடலாம். செய்தியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. 

இதேபோல் வேட்பாளர்களும், அவரது தலைமை ஏஜெண்டுகளும், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வேட்பாளர்களும், தலைமை ஏஜெண்டுகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறையில் வைத்துவிட்டு செல்லவேண்டும். வாக்கு ஏஜெண்டுகள் பென்சில், பேப்பர், சாதாரண ரக கால்குலெட்டர்கள் கொண்டு வர அனுமதி உண்டு. எக்காரணம் கொண்டு வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சொல்போன்களை கொண்டு வரக்கூடாது. மீறிக்கொண்டு வரும் வாக்கு ஏஜெண்டுகள் திருப்பி அனுப்பப்படுவார்கள். செய்தியாளர்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டை, அரசு அளித்துள்ள அடையாள அட்டை, செய்தி ஒளிபரப்பு துறை அளித்துள்ள அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

ஒரு சுற்று எண்ணிக்கை முடிய 1 மணி நேரம் ஆகலாம். முதல் சுற்று எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. முதலில் சென்னையில் பதிவான 3082 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பிறகு வாக்கு சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று அறிவிக்க 9 மணியிலிருந்து 9.15 ஆகலாம். முழுமையான முடிவுகள் அறிவிக்க மாலை 5 மணி வரை ஆகும். 

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony