முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை - பாதுகாப்பு குறித்து கமிஷனர் பேட்டி

வியாழக்கிழமை, 12 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.12 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி சென்னையில் உள்ள 17 தொகுதிகள் 4 மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-

சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதி சேர்த்து 17 தொகுதிகளுக்கு 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

சென்னைக்கு உட்பட்ட இடத்தில் 3 மையங்களும், காஞ்சிபுரத்தில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையமும் சென்னை போலீசாரின் பாதுகாப்பில வருகிறது. லயோலா கல்லூரி, அண்ணா பலக்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய மையங்கள் சென்னையிலும், முகமது சதக் கலைக்கல்லூரி காஞ்சி மாவட்டத்திலும் வருகிறது. லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளும், அண்ணா பல்கலைக்கழக வாக்கு மையத்தில், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளும்,  ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில்  ஆர்.கே.நகர், துறைமுகம், ராயபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளும், முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் சோளிங்நல்லூர் தொகுதியின் வாக்குகளும் எண்ணப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், ஒவ்வொரு இணை ஆணையர் தலைமையில் இரண்டு துணை ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் உள்ளேயும், ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் வெளியிலும் பாதுகாப்புக்களை கவனிப்பார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உதவி ஆணையர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 27 ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். லயோலா கல்லூரியில் 2 துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள், 30 ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 28 ஆய்வாளர்கள், 55 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் 1 துணை ஆணையர், 3 உதவி ஆணையர், 9 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

மொத்தம் 2700 போலீசார், 320 துணை ராணுவப்படை உட்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே 1 அடுக்கும், வாக்கு எண்ணிக்கை மைய வாயிலுக்கும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்திற்கும் இடையேயில் 1 அடுக்கு பாதுகாப்பும், வாக்கு எண்ணிக்கை மைய கட்டிட வாசலில் 1 அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் அதிகாரிகள் வாகனம் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படும். கண்காணிப்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், செய்தியாளர்கள் மட்டுமே செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், காவலர்களில் உதவி ஆணையர், மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள காவல் அதிகாரிகள் மட்டுமே உள்ளே கொண்டு செல்லலாம். 

வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் பென்சில் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கேமரா, வீடியோ கேமரா, சாதாரண ரக கால்குலெட்டர் அனுமதி உண்டு. தேர்தல் அலுவலர்கள் வாகனம் தவிர மற்றவர்களின் வாகனங்கள் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுப்பொருட்கள், தண்ணீர், தீப்பெட்டிகள், சயின்டிபிக் கால்குலெட்டர், இங்க்பேனா உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.  அனுமதி இன்றி  எடுத்து வரும் பொருட்கள் போலீஸ் கவுன்டரில் பாதுகாக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் டோக்கன் வழங்கப்படும். 

வாக்கு மைய கட்டிடத்தின் உள்ளே 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் பிரிவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இங்கு வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 2 பிரிவில் தேர்தல் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் இயங்கும், 3 -வது பிரிவில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், அவர்கள் இங்கு அமர்ந்து செய்திகளை சேகரிக்கலாம். இந்த அறையில் மட்டுமே கேமராக்கள், செல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். 4-வது பிரிவில் வேட்பாளரும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இங்கு அவர்களது செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். 

இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony