முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தேர்தல்: 20 புதுமுகங்கள் எம்.எல்.ஏ.வாக தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.15 - மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் 20 பேர் புதுமுக எம்.எல்.ஏ. அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.

 தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை உள்பட 6 மாவட்டங்களில் 4 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 36 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டத்தில் 7 பேர், விருதுநகரில் 6 பேர், திண்டுக்கல்லில் 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், தேனி, சிவகங்கையில் தலா ஒருவர் புதுமுக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளனர்.

மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.), மதுரை கிழக்கு தமிழரசன் (அ.தி.மு.க.), மதுரை மத்தி சுந்தர்ராஜன்(தே.மு.தி.க.), உசிலம்பட்டி கதிரவன்(பா.பி.), மதுரை தெற்கு அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), திருப்பரங்குன்றம் ஏ.கே.டி.ராஜா(தே.மு.தி.க.), சோழவந்தான் கருப்பையா (அ.தி.மு.க.) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.  இது தவிர மதுரை வடக்கு தொகுதியில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), திருமங்கலத்தில் முத்துராமலிங்கம்(அ.தி.மு.க.), ஆகியோர் 2 -வது முறையாகவும், மேலூர் சாமி (அ.தி.மு.க.) ஒரே தொகுதியில் மூன்றாவது முறையாகவும் எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி லாசர் (மார்க்சிஸ்ட்) முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.) 2-வது முறையாகவும், கம்பத்தில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் (தி.மு.க.), போடி தொகுதியின் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) மூன்றாம்முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் வேணுகோபால் (அ.தி.மு.க.), வேடச்சந்தூர் தொகுதியில் பழனிச்சாமி (அ.தி.மு.க.), நிலக்கோட்டையில் ராமசாமி(புதியதமிழகம்) முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்கரபாணி(தி.மு.க.), நத்தம் தொகுதியில் விஸ்வநாதன்(அ.தி.மு.க.), ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி (தி.மு.க.) ஆகியோர் ஒரே தொகுதியில் 4 -ம் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். திண்டுக்கல்லில் ஒரே தொகுதியில் பாலபாரதி (மார்க்சிஸ்ட்) மூன்றாம் முறையாக எம்.எல்.ஏ.ஆகியுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ராஜேந்திரபாலாஜி(அ.தி.மு.க.), சாத்தூர் உதயகுமார் (அ.தி.மு.க.), அருப்புக்கோட்டை வைகைச்செல்வன் (அ.தி.மு.க.) ராஜபாளையம் கோபால்சாமி (அ.தி.மு.க.), விருதுநகர் பாண்டியராஜன் (தே.மு.தி.க.), திருவில்லிபுத்தூர் பொன்னுப்பாண்டி (இ.கம்யூ) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். திருச்சுழி தொகுதியில் தங்கம்தென்னரசு (தி.மு.க.) 3-வது முறையாக எம்.எல்.ஏ.ஆகியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முருகன் (அ.தி.மு.க.), ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா(ம.ம.க.) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். பரமக்குடி சுந்தர்ராஜன்(அ.தி.மு.க.), திருவாடானை சுப.தங்கவேலன் ஆகியோர்  3-ம் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பழனிச்சாமி (அ.தி.மு.க.) முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். மானாமதுரை தொகுதி குணசேகரன் (அ.தி.மு.க.), சிவகங்கை குணசேகரன் (இ.கம்யூ), திருப்புத்தூர் பெரியகருப்பன் (தி.மு.க.) ஆகியோர் 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony