86-வது ஆஸ்கர் விருதுகள்: 7 விருதுகளை தட்டியது கிராவிட்டி

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      சினிமா
Image Unavailable

 

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 4  - 2013 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. 

உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகும் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. 

இதற்கு உலகம் முழுவதும் உள்ள திரைத் துறையினர் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. ரசிகர்களும் இதை ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். 

கடந்த 2013 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கான 86 _வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. 

இந்த விழாவில் ஹாலிவுட்டைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரையுல கினர் கலந்து கொண்டனர். 

சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் டைட்டானிக் புகழ் நடிகரான லியாண்டோ காபிரியோ ( தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்)  மற்றும் புரூஸ் டெர்ன் (நெப்ராஸ்கா) ஆகியவை இறுதிப் போட்டியில் இருந்தன. 

இதில் இருவரையும் முந்திக் கொண்டு டல்லாஸ் பையர்ஸ் கிளப் படத்தில் நடித்த மேத்யூ மெக்கனாகி க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 

அதே படத்தில் நடித்த ஜாரெட் லெட்டோ வுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு சிறந்த படத்திற்கான விருதை 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படம் தட்டிச் சென்றது. 

இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது புளூ ஜாஸ்மின் படத்தில் நடித்த கேத் பிளாஞ்செட் டிற்கு கிடைத்துள்ளது. 

வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் வசூலை குவித்த கிராவிட்டி ஹாலிவுட் படம் இந்த ஆண்டின் அதிகபட்சமான ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. 

சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், விஷ$வல் எபெக்ட், ஒலிக்கலவை, பின்னணி இசை, இயக்கம் ஆகிய பிரிவுகளின் கீழ் 7 ஆஸ்கர் விருதுகளை கிராவிட்டி தட்டிச் சென்றுள்ளது. 

இப்படத்தை இயக்கிய அல்பன்ஸோ குரோன் சிறந்த இயக்குநர் விருதை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் தி கிரேட் பியூட்டி என்ற இத்தாலிய படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை பாவ்லோவ் சொரண்டினோ இயக்கியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: