தைரிய லட்சுமி: இந்தியப் பெண்ணுக்கு சர்வதேச வீர விருது

புதன்கிழமை, 5 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.6 - திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச வீரப் பெண்மணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை அமெரிக்க அதிபரின் மனைவி மிஷெல் ஒபாமா வழங்கவுள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி 2005-ம் ஆண்டு தனது 16-வது வயதில் திராவக (ஆசிட்) வீச்சுக்கு ஆளானார். தன் தோழியின் 32 வயது அண்ணனின் காதலை ஏற்க மறுத்ததால், லட்சுமியின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. 

அந்த திராவகம் அவர் முகத்தை நிரந்தரமாக சிதைத்து விட்டது. அதன் பிறகு எவ்வித சிகிச்சையாலும் முகத்தை இயல்பான தோற்றத்துக்கு மாற்ற முடியவில்லை. 

திராவக வீச்சுக்கு ஆளான பெரும்பாலானவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிவதில்லை. தங்களின் முகத்தைச் சமூகத்துக்குக் காட்ட விரும்பாமல் மறைந்தே வாழ்கின்றனர். 

கல்வி பயிலவோ, வேலைக்குச் செல்லவோ முடிவதில்லை. சொல்லப்போனால் பொது இடங்களில் வெளிப்படவே அஞ்சுகின்றனர். ஆனால், லட்சுமி ஒளிந்து வாழ விரும்பவில்லை. 

இந்தியாவில் திராவகத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தின் தனித்த அடையாளமாக லட்சுமி விளங்கினார். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தோன்றி, திராவக விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காக 27 ஆயிரத்துக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெற்று, உச்ச நீதிமன்றத்துக்கு அந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். 

லட்சுமியின் தளராத முயற்சியால், திராவக விற்பனையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. திராவகத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை எளிதில் கையாளும் விதத்தில் நாடாளுமன்றம் திருத்தங்களைக் கொண்டு வந்தது. 

திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அதிகரித்தல் திராவகத் தாக்குதல்களைத் தடுக்கவும், உரிய சட்டத்தைக் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்றவை தொடர்பாக தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் பெற்றார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருது வழங்கும் விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பங்கேற்பதாக இருந்தது. உக்ரைனில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக அங்கு அவர் செல்வதால், கெர்ரிக்குப் பதிலாக துணை அமைச்சர் ஹீதர் ஹிக்கின்பாதம் பங்கேற்பார். 

இவ்விருது லட்சுமி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கும் வழங்கப்பட உள்ளது. 

கடந்த 2007-ம் ஆண்டு முதல் இவ்விருதை அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கி வருகிறது. மனித உரிமைகள், மகளிர் சம உரிமை, சமூகச் செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: