அ.தி.மு.க.வின் நல்லாட்சி மலரநாமும் ஒரு அணிலாக செயல்பட்டது மகிழ்ச்சி-நடிகர் விஜய்

திங்கட்கிழமை, 30 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே.- 30 - தமிழக தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க.வின் நல்லாட்சி மலர நாமும் ஒரு அணிலாக இருந்து செயல்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய பணிகளுக்கு நாமும் உறுதுணையாக இருக்க வேண்டும் என ரசிகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் பேசினார்.
இது குறித்த விபரம் வருமாறு:- சென்னை சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை 7 மணி அளவில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். தமிழகமெங்குமிருந்து ஊராட்சி, ஒன்றிய, நகர, மாவட்ட இளைஞரணியைச் சேரந்த தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாவது:-
தவறு செய்த குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காக, நமது இயக்கம் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டேன்.
நீங்கள் பல்வேறு அரசியில் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்றாகல ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது கடுமையான உழைப்பைப் பாராட்டியபோது எனக்குப் பெருமையாக இருந்தது.
மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசந் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.
இனி மேலும் சமூக நலப்பணியைத் தொடர்ந்து செய்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, அவர்களின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும் விவோகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில்.
இவ்வாறு விஜய் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நற்பணி மன்றத்தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மாநில பொறுப்பாளர்களாக புஸ்ஸி ஆனந்த் அவர்களும் ஜி.பாஸ்கர் அவர்களும் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் ஆர்.ரவிராஜா, ஏ.சி.குமார், ராஜேந்திரன் கலந்து கொண்டனர். மாநில மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் வரவேற்புரை ஆற்ற, மக்கள் இயக்க நிறுவனர் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்புரையாற்றி அனைவருக்கும் நன்றி கூறினார்.
அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சரான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் விருந்து கொடுத்தார் விஜய்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: