மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஏமாற்றம்

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

பெர்த்,ஏப்.2 - மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை கண்டுபிடிப்பதற்கான தேடல் நேற்று 23-வது நாளாக தொடர்ந்து நடந்தது.இந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடல் எல்லை சுருக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் நொறுங்கி விழுந்ததாகக் கூறப்படும் மலேசிய விமானத்தை தேடும் பணி நேற்று 23- வது நாளாக நடைபெற்றது. இதுவரை எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் தேடுதல் பகுதிகளை குறைக்க ஆஸ்திரேலிய கடற்படை திட்டமிட்டு வருகிறது. மலேசிய ஏவுகணை போர்க் கப்பலான கேடி லெகியு நேற்று ஹமாசுடன் தேடுதல் வேட்டைக்கு மேற்கு பெர்த்தில் இணைந்தது.

விமானத்தை தேடும் பகுதி கடந்த வாரம் 28-ம் தேதி மாற்றப்பட்டது. தற்போது 1100 கி.மீ. வடக்கில் தேடும் பணியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் 11 விமானங்களும்,5 கப்பல்களும் ஈடுப்பட்டுள்ளன.

புதிய தேடல் பகுதியில் பல்வேறு நிறங்களிலும் கோணங்களிலும் மிதக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற நோக்கில் ஆராயப்பட்ட நிலையில், அவை அனைத்தும் மீன்பிடி சாதனங்களின் குப்பைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டு, தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுனர். எனினும் இதுவரை கருப்புப் பெட்டியின் சிக்னலை ப்ளுபின் - 21 என்ற கருவி கண்டறிய முடியவில்லை. கருப்புப் பெட்டியின் பேட்டரி காலாவதி ஆக ஒரு வாரம் மட்டுமே உள்ளது என்பதால் தேடல் அவசரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: