முக்கிய செய்திகள்

மரியம்பிச்சை கார் விபத்து பிடிபட்ட லாரி சென்னைக்கு கொண்டுவரப்பட்டது

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை இறப்பதற்கு காரணமான லாரி நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 23-ம் தேதி அமைச்சர் மரியம்பிச்சை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.  பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் கூட்ரோடு அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் மரியம்பிச்சை மரணம் அடைந்தார். இந்த விபத்து குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.  போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து, லாரி டிரைவர் ரஹமத்துல்லா கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் லாரியின் உரிமையாளர் ஷேக் இமாம், அஸாம் மாநிலத்துக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கு வங்காளம் கொரக்பூரில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். விபத்து ஏற்படுத்திய லாரி நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை கொண்டு வரப்பட்டது. லாரி உரிமையாளர் ஷேக் இமாம், லாரி டிரைவர் ரஹமத்துல்லா ஆகியோர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட லாரியை தடயவியல் துறை அதிகாரிகளும் போக்குவரத்து பிரிவு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்த உள்ளனர். சோதனையில் விபத்து ஏற்பட்டது சம்பந்தமாக தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது. ஏற்கனவே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட லாரி டிரைவர் ரஹமுத்துல்லாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி விசாரணை மற்றும் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட லாரி, விபத்து நடந்த அமைச்சரின் கார் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்ற தடவியியல் சோதனை அறிக்கைகள் பின்பு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அரசுக்கு அளிக்கப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: