முக்கிய செய்திகள்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் முருகப் பெருமானுக்கு இன்று மகாகும்பாபிஷேகம்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஜூன்- .6 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோயிலில் இன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ. 5 கோடி செலவில் உபயதாரர் மூலம் திருப்பணிகள் நடத்தி ஜூன் 6 ம் தேதி(இன்று) மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கும் வகையில் கடந்த அக்டோபர் 29 ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர்கள், வல்லப கணபதி மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானங்களின் சக்தி கலை இறக்கம் செய்து பணிகள் துவங்கின. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, திருவுருவங்கள் மரத்தால் வடிவமைக்கப்பட்டு அதில் சக்தி, கலை ஏற்றம் செய்யப்பட்டு சண்முகர் சன்னதியில் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மூலவர் சன்னதியில் திருப்பணிகளுக்காக மூலஸ்தானம் சாத்தப்பட்டது. சண்முகர் சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டுள்ள மரத்தினால் ஆன மூலவர் மற்றும் வேலுக்கே அனைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன. பக்தர்களும் இந்த மூலவரையே இதுவரை தரிசித்து வந்தனர். கோயிலில் எழுந்தருளி உள்ள சுவாமிகளின் கற்சிலைகள் வாட்டர் பிளாஸ்டர் முறையில் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக வார்னீஷ் அடிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக பூஜைகளின் தொடக்கமாக பூர்வாங்க பூஜைகளும், கடந்த 2 ம் தேதி யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக பணிகளின் துவக்கமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பாலாலயத்தின் போது மூலவர்கள் சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஷ்வரர், கோவார்த்தனாம்பிகை ஆகியோரின் சக்தி, புனித நீர் அடங்கிய கலசங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு யாகசாலையில் வைத்து எட்டுகால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.  நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை முடிந்து புனித நீர் அடங்கிய கும்பங்களில் தர்ப்பையின் ஒரு நுனி கட்டப்பட்டு கோயிலுக்குள் மூலவர்களின் திருக்கரங்களில் மற்றொரு நுனி கட்டப்பட்டது. பூஜைகள் முடிந்து புனித நீர் குடங்களில் இருந்த சுவாமிகளின் சக்தி, மீண்டும் மூலவர்களுக்கு கலை ஏற்றம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8 ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மகா தூப தீபாராதனைகள் முடிந்து காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம், வெள்ளி, குடங்களை கோயில் சிவாச்சார்யார்கள் ராஜகோபுரத்திற்கும், வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை விமானங்களுக்கும் எடுத்து சென்றனர். அங்கு பூஜைகள் முடிந்து கலசங்கள் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து கோயிலுக்குள் மூலவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடைபெறும். மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். நாளை முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.
----
புட்நோட்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 6 ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: