முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜி, அந்தோணியை சந்திக்க காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.- 13 - தனித் தெலுங்கானா மாநில விவகாரம் தொடர்பாக தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் டெல்லியில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியையும் இந்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.  ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் நீண்ட காலமாக கோரி வருகிறார். இதற்கு தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். தெலுங்கானா விஷயத்தில் ஆந்திர மாநிலம் கடந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டு போனது. பலவிதமான போராட்டங்கள் நடந்து அம்மாநிலத்தின் பொருளாதாரத்தையே நாசம் செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறி போனது. பின்னர் இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்ட பிறகு விவகாரம் ஓரளவிற்கு ஓய்ந்துள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் இதை விடுவதாக இல்லை. தெலுங்கானா பகுதியை சேர்ந்த இவர்கள் மீண்டும் இப்பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கட்சி மேலிடத்தை நெருக்குகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இந்த வாரம் புதன் அல்லது வியாழக்கிழமையன்று டெல்லி சென்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் ஆகியோரை சந்திக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு விரைவில் தெலுங்கானா மாநிலம் பற்றி அறிவிக்காவிட்டால் நாங்கள் பதவியில் நீடிக்க மாட்டோம் என்றும் இவர்கள் மிரட்டி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony