முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி: தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.14 - தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு மீது விசாரணை இன்று நடக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு முதல் 1-ம் வகுப்பில் இருந்து 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தாண்டு 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட இருந்தது. ஆனால் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் தரமானதாக இல்லை என்றும் அதனால் தற்காலிகமாக இந்த சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பதிலாக பழைய பாடத்திட்டமே இந்தாண்டு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. 

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்தார். அதேசமயத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கவோ, புதியதாக சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை சமச்சீர் கல்வித்திட்டம் தொடரலாம் என்றும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி இக்பால் உத்தரவிட்டார். சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்,தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் நேற்றுமுன்தினம் டெல்லி சென்றனர். டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சமச்சீர் கல்வித்தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. நீதிபதிகள் செளகான், சுதந்திர குமார் ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். மனுவை படித்து பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் இன்று மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் ஐகோர்ட்டு தடை நீக்கப்படுமா? என்பது இன்று தெரியவரும். இதற்கிடையே கடலூரை சேர்ந்த வெங்கடேஷ், சென்னை வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல் செய்தனர். தமிழக அரசின் அப்பீல் மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony