முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் சிகிச்சைப்பெற்ற நடிகர் ரஜினி குணமடைந்தார்

Image Unavailable

 

சென்னை, ஜூன்16 - உடல் நிலை குறைவு காரணமாக, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து இருப்பிடம் திரும்பினார். அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது குறித்த விபரம் வருமாறு:-

நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ``ராணா'' படத்தினை, ஈராஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

ராணா படத்தின் துவக்க விழா சென்னையில் கடந்த ஏப்.29-ந் தேதி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. நடிகர் ரஜினி நடிக்கும் காட்சி படமாக்கப்படும்போது, அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் உடனடியாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார்.

ஓய்விலிருந்த அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்படவே அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மே.13-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளதால் டயாலிஸ் சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மே. மாதம் 18-ந் தேதி இரவு மீண்டும் ரஜினிக்கு உடல்நிலை கவலைக்கிடமானதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினியை அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் பரவின. இதற்கிடையில் ரஜினி குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிராத்தனைகள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா லதா ரஜினிகாந்திடம் ரஜினி உடல்நிலை குறித்து தொலைபேசியில் நலன் விசாரித்து அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில் கடந்த ஏப.21-ந் தேதி தனிவிமானம் மூலம் ரஜினி சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற சென்றார். அவருடன் அவரது மனைவி லதாரஜினி, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் உட்பட உறவினர்கள் உடன் சென்றனர்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி குணம் அடைந்து வருவதாக அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் நடிகர் ரஜினி முற்றிலும் குணம் அடைந்து நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பிடம் திரும்பினார். அவர் இருப்பிடம் திரும்பியவுடன் முதன்முதலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்  ஆகி வந்தவுடன் தமிழக முதல்வருடன் தான் முதலில் பேச வேண்டும் என்று முடிவு செய்து, தமிழக முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்து, அவர் குணமடைந்தது குறித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதாகவும், அவர் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

ரஜினிகாந்த், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, தான் இன்னும் ஒன்றரை மாதங்களல் இந்தியா திரும்ப இருப்பதாக தெரிவித்தார்.

லதா ரஜினிகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சென்னையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக முதல்வர் நலம் விசாரித்ததை நினைவுகூர்ந்து தமிழக முதல்வருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: