முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகளில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.17 - விவசாய பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களில் இருந்து முதல் போக பாசனத்திற்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த 14 ம் தேதி முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பெரியார் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு தேனி மாவட்ட விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று கடந்த 14 ம் தேதி முதல் பெரியார் அணையில் இருந்து 120 நாட்களுக்கு முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனால் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

அதே போன்று வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதல்வரின் உத்தரவுப்படி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

அதே போன்று பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு , திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளின் விடுத்த கோரிக்கையை  ஏற்ற முதல்வர் கார் பருவ சாகுபடிக்காக 120 நாட்களுக்கு மேற்கண்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டார். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

அதன்படி முதல்வரின் ஆணையை ஏற்று பெரியார் அணை, வைகை அணை, பாபநாசம், சேர்வலார் அணை மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெரியார் அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதன் மூலம் 7 ஆயிரத்து 838 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

விவசாய நிலங்கள் பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளதோடு பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony