சென்னை அருகே செல்போன் ஆலையில் தீ

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

ஸ்ரீபெரும்புதூர், ஜூன். 17 - ​ஸ்ரீபெரும்புதூரில் சென்னை​ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு பிரிவுகளுடன் செயல்படும் இந்த தொழிற்சாலையில் பெயிண்ட் பிரிவில் இன்று காலை 11 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த கட்டிடத்தில் 3 ஆயிரம் லிட்டருக்கு மேல் பெயிண்ட் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததால் சிறிது நேரத்திற்குள் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டியில் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. 

கட்டிடம் முழுக்க தீ பரவியது. சுமார் 30 அடி உயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீகட்டுக்குள் வராததால் nullந்தமல்லி, காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை முற்றிலும் அணைத்தால்தான் தொழிலாளர்கள் யாராவது அதில் சிக்கி உள்ளனரா? என்பது தெரியவரும். 

இதற்கிடையே தொழிற் சாலையில் சூழ்ந்த புகை மூட்டத்தில் சிக்கிய 3 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: