அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் எவ்வளவு?

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.24 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு என்று துல்லியமாக தெரிவிக்குமாறு தொலைத் தகவல் தொடர்பு அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு(டிராய்) சி.பி.ஐ. கோரியுள்ளது. 

இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கையில் கூறியதையடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. ஆனால் இது தொடர்பாக பூர்வாங்க விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ. கடந்த 2099 ல் இழப்பு ரூ. 22 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டது. பின்னர் அந்த தொகை ரூ. 35 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு அடுத்த மாதம் 7 ம் தேதி விசாரணைக்கு வரும் போது எத்தனை கோடி ரூபாய் இழப்பு என்று துல்லியமாக கூற முடியாமல் எப்படி வழக்கை நடத்துகிறீர்கள் என்று நீதிபதி கேட்டால் என்னாவது என்ற அச்சத்தில் டிராய் அமைப்பிடம் துல்லியமாக கணக்கிட்டு தெரிவிக்குமாறு சி.பி.ஐ. கேட்டிருக்கிறது. இதே கோரிக்கையை சி.பி.ஐ. 6 மாதங்களுக்கு முன்பே டிராய் அமைப்பிடம் வைத்தது. ஆனால் இன்று வரை டிராய் பதில் ஏதும் தரவில்லை. எனவே அந்த அமைப்புக்கு நினைவூட்டல் கடிதத்தை சி.பி.ஐ. அனுப்பியிருக்கிறது. 

இந்த ஏலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட சி.ஏ.ஜி. என்று அழைக்கப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளர் 3 வழிகளை கையாண்டார். முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த உரிமத்தை வாங்கிய சிலர் அதையே கூடுதல் விலைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்றனர். அதையே அப்போதைய சந்தை மதிப்பு விலையாக கருதி அதை கணக்கிட்டார். அந்த விலைக்கு வாங்கியவர்கள் ஈட்டிய வருமானம் அவர்களுக்கு கிடைத்த லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் அதை மதிப்பிட்டார். அதற்கு பிறகு 3 ஜி என்ற சேவையை ஏலத்தில் விற்பனை செய்த போது அரசுக்கு கிடைத்த வருவாயை ஒரு ஆதாரமாகவும், இதே போன்ற சேவைக்கு சர்வதேச அரங்கில் அதிலும் குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று ஒப்பிட்டு பார்த்தும் கணக்கிட்டார். எனவே அவருடைய கணக்குப்படி ரூ. 1.76 லட்சம் கோடி என்று வருவாய் இழப்பு மதிப்பிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: