மொரானியின் ஜாமீன் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் 29 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 

ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானியும் ஒருவர். இவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஐகோர்ட்டு நீதிபதி அஜித் பாரிகோஹி விசாரணை நடத்தினார். மொரானியின் எம்.ஆர்.ஐ. அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக ஜி.பி.பந்த் மருத்துவமனை கூறியிருந்ததும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. 

மொரானி முக்கியமான நோயினால் அவதிப்படுகிறார் என்று அறிக்கை தர இந்த மருத்துவமனை மறுத்துவிட்டது. இந்த ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அஜித் பாரிகோஹி இதுதொடர்பான அடுத்த கட்ட விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார். 

இந்த நிலையில் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யுமாறு சுவிட்சர்லாந்து அரசு அதிகாரிகளை இந்திய சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏற்கனவே மொரீஷியஸ் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணை விபரங்களை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து விட்டனர். இந்த நிலையில் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்  3 வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. விரைவில் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: