காசியாபாத், ஜூலை.3 - ஏ.டி.எம். மெஷினை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த பணப்பெட்டியை ( கேஷ் பாக்சை ) உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் கொள்ளை போகவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஹார்ப்பூர் என்ற நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு சில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடிக்க இரவு நேரத்தில் வந்தனர். அவர்கள் எப்படியோ அந்த ஏ.டி.எம். மெஷினை உடைத்து விட்டனர். ஆனால் அதற்குள் பொருத்தப்பட்டிருந்த பணப்பெட்டியை அவர்களால் உடைக்க முடியவில்லை. அதனால் அவர்களால் பணத்தை கொள்ளை அடிக்க முடியவில்லை.
அந்த கேஷ் பாக்சில் இருந்த பணம் அப்படியேதான் இருந்தது என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்றாலும் அந்த ஏ.டி.எம்.மையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் ஒன்றை திருடர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக எ.டி.எம். மையங்களில் சி.சி.டி.வி.கேமிரா ஒன்று வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த கேமிராவை திருடர்கள் எப்படியோ ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர்.
மேலும் அந்த ஏ.டி.எம்.மையத்தில் பாதுகாப்புக்கு காவலர் யாரும் நிறுத்தப்படவில்லை
இந்த தகவல்களை ஹார்ப்பூர் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.