முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23,535 கோடி நிதி ஒதுக்கீடு-ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 7 -2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரத்து 535 கோடியை மத்திய திட் டக்குழு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டக்குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.3 ஆயிரத்து 467 கோடி அதிகமாகும். இந்தநிதி ஒதுக்கீடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய திட்டக்குழு நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அந்தந்த மாநிலங்களின் திட்டங்களுக்கு தகுந்தவாறு மத்திய திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும். மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேற்று மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாண்டெக் சிங் அலுவாலியா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புதுடெல்லி சென்றார். டெல்லி சென்ற அவரை முன்னதாக தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள்   ஆகியோர் பூச்செண்டு கொடுத்து  வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாரங்கி மற்றும் உயரதிகாரிகள் சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் தம்பித்துறை மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து மத்திய திட்டக்குழு கூட்டத்திற்கு சென்றார். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஜெயலலிதா சென்றதும் அவருக்கு  மாண்டக் சிங் அலுவாலியா பூச்செண்டு கொடுத்து அன்புடன் வரவேற்றார். மாண்டெக் சிங் அலுவாலியாவுடன் ஜெயலலிதா சிறிது நேரம் பேசினார். இந்த பேச்சுக்கு பின்னர் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் மாண்டக் சிங் அலுவாலியா மற்றும் அவரது துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுவிட்தாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து கொடுத்தல், மாநிலத்தில் சுகாதார வசதிகளை பெருக்கவும், வறுமையை ஒழிக்கவும் தமிழகத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். ஜெயலலிதா கூறிய நியாயமான திட்டங்களை ஆய்வு செய்த திட்டக்கமிஷன் ஜெயலலிதா கேட்டதை விட ரூ.535 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியது. அதாவது 2011-12-ம் ஆண்டுக்கான மொத்த திட்ட நிதி ரூ.23 ஆயிரத்து 535 கோடியை திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்த தொகையை விட ரூ. 3 ஆயிரத்து 535 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்த போதிலும் கருணாநிதியால் தமிழக திட்டங்களுக்கு இவ்வளவு அதிகமாக நிதியை கேட்டு பெற முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க. கட்சியானது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததோடு மத்திய அரசிலும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தும் ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால் கூடுதல் நிதி பெற்றுள்ளார்.
கூட்டம் முடிந்ததும் ஜெயலிலாதவை மாண்டெக் சிங் அலுவாலியா வாசல்படி வரை வந்து மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா திட்டக்குழுவின் நிதி ஒதுக்கீடு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிதி ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்பார்த்ததுதான். தமிழக அரசின் கடன் ரூ. ஒரு லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கிறது. இதை சமாளிக்க தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்டக்குழுவை நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசின் சில கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன் என்று ஜெயலலிதா மேலும் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாண்டக்சிங் அலுவாலியாவிடம் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாண்டக் சிங் அலுவாலியா, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony