நாட்டு மக்கள் நலம்பெற ஊழல் ஒழிக்கப்படவேண்டும் - சரத்குமார்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
sarath-kumar

 

சென்னை, மார்ச்.1 - நாட்டு மக்கள் நலம்பெற ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய பட்ஜெட் குறித்து சரத்குமார்  அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான கடன் உதவி 4.75 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தியிருப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாயக்கடன்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விவசாயக் கடன்களை குறிப்பிட காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் மானியம் 3 சதவிதம் ஆக அதிகரிப்பு போன்ற அறிவுப்புகள் வரவேற்கத்தக்கன. கடந்த நிதியாண்டில் வேளாண் துறையின் வளவ்ச்சி 5.1 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அறிவித்திருந்தாலும், பிற துறைகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, இந்த வளர்ச்சி விகிதம் குறைவு. எனவே இந்த நிதியாண்டில் வேளாண்துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியதோடு விட்டுவிடாமல்  முறையாக கண்காணித்து உற்பத்தி  பெருகவும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறையவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்விக்கு 21 ஆயிரம் கோடி, கல்வி வளர்ச்சிக்கு 52,057 கோடி, பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு 58 ஆயிரம் கோடி, சமூக நலத்திட்டங்களுக்கு 1.6 லட்சம் கோடி, சுகாதாரத் திட்டங்களுக்கு 26,760 கோடி என்று நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிஒதுக்கீடுகளின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் வளர்ச்சி பணிகளை முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் முதலீடுகளுக்கு மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களோடு தமிழகத்தையும் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தனிநபர் வருமானவரி உச்சவரம்பு 1.60 லட்சத்திலிருந்து 1.80 லட்சம் வரை 20 ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருக்கிறது. மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதும் அறிவிக்கப்பட்டு தற்போதும் அறிவிக்கப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டையே உலுக்கிவரும் பல்வேறு ஊழல்களுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நிதியமைச்சர் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். சுங்ந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பொழுது, விசாரணைக் கமிஷன்கள்  நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளவே தவிர, குற்ற சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வரலாறு இல்லை. எனவே ஊழல் ஒழிப்பிற்கான சட்டங்கள் கடுமையாகப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தூய்மையும் நேர்மையும் நிலைத்து நிற்கும், மேலும் மக்கள் வரிப்பணம் மக்களுக்கே முழுமையாக சென்றடைந்து வறுமை நிலைமாறும்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப்பணம் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் துணிச்சலான பட்ஜெட்டாக இல்லாமல் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாகவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றே கருதலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: