சக்சேனா வழக்கில் சம்மன்: கலாநிதி ஆப்சென்ட்

சென்னை, ஜூலை.14 - மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சன் டி.வி. கலாநிதி மாறனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் கலாநிதி மாறன் ஆஜராகவில்லை. 26-ந் தேதிக்கு மேல் ஆஜராக அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா மீது பணம் மோசடி, கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் பட அதிபர் செல்வராஜ் புகார் அளித்தார். அதையொட்டி சக்சேனாவை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். பின்பு சேலத்தை சேர்ந்த மேலும் ஒரு பட தயாரிப்பாளர் சக்சேனா மீது புகார் அளித்தார். அதன் பேரில் மேலும் ஒரு வழக்கு சக்சேனா மீது பதிவு செய்யப்பட்டது. முதல் வழக்கில் சக்சேனாவை போலீசார் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் சக்சேனா அனைத்துக்கும் கலாநிதி மாறனே மூலகர்த்தா என்று கூறியதாக தெரிகிறது.
இதன் பிறகு சக்சேனா ஜாமீன் கேட்டு அளித்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் சக்சேனாவுடன் அவரது கூட்டாளி அய்யப்பனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சக்சேனாவிடம் வாங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு கே.கே.நகர் போலீசார் நேற்று காலை ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையொட்டி நேற்று காலை கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் கலாநிதி மாறன் வரவில்லை. மாறாக அவருடைய வழக்கறிஞர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அவர்கள் கலாநிதி மாறன் சார்பில் மனு ஒன்றை அளித்தனர். அதில் 26 ஜூலை வரை தொடர்நது நிகழ்ச்சிகள் உள்ளதால் ஜூலை 26-க்கு மேல் ஆஜராக அனுமதி கேட்டிருந்தனர். அதை போலீசார் ஏற்றுக் கொண்டனர். அதனடிப்படையில் கலாநிதி மாறன் வரும் ஜூலை 27-ந் தேதி ஆஜராவார் என தெரிகிறது.