முக்கிய செய்திகள்

பண மோசடி புகார்: சக்சேனா 4-வது முறையாக கைது

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.16 - ``வல்லக்கோட்டை'' படத் தயாரிப்பாளர் கொடுத்த பண மோசடி புகாரில் சக்சேனா 4 வது முறையாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் 3 வது வழக்கில் அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்த விபரம் வருமாறு:-

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பி.டி.ராஜா(31). இவர் நடிகர் அர்ஜுன் நடித்த ``வல்லக்கோட்டை '' என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். 2010 ஜூன் மாதம் இவரை சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மற்றும் அவரது உதவியாளர்கள் அணுகி, வல்லக்கோட்டை படத்தை சன் டி.வி. சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமைக்காக ரூ.1.50 கோடி தருவதாக பேசி உள்ளனர். அக்டோபர் மாதம் 30-ம் தேதி இதற்கான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளனர். 

இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா, வல்லக்கோட்டை படத்தை நவம்பர் 23-ந் தேதி ரிலீஸ் செய்துள்ளார். இதற்கிடையில் ராஜாவை தொடர்பு கொண்ட சக்சேனா, சென்னை சூளைமேட்டில் உள்ள புளூ ஸ்கை என்ற நிறுவனத்திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இந்த புளு ஸ்கை நிறுவனம் சக்சேனா மைத்துனர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கு சென்ற படத் தயாரிப்பாளர் ராஜாவை சுரேஷ் மற்றும் சக்சேனாவின் உதவியாளர்கள் ஐயப்பன், தம்பிதுரை ஆகியோர் மிரட்டி உங்கள் படம் ``பாக்ஸ் ஆபிஸ் கிட்'' அடிப்படையில் சரியாக ஓடவில்லை. எனவே ரூ.1.50 கோடி கொடுக்க முடியாது. ரூ.70 லட்சம் மட்டும்தான் தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, எவ்வளவோ கெஞ்சி கேட்டும் ரூ.70 லட்சத்திற்கு மேல் அதிக பணம் கொடுக்க அவர்கள் சம்மதிக்க மறுத்ததால் அவர்கள் கொடுக்கும் ரூ.70 லட்சத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்துள்ளார். 

ஆனால் ரூ.70 லட்சத்தை கொடுக்காமல் அரசு வரி என்று கூறி ரூ.5 லட்சத்தை பிடித்துக் கொண்டு ரூ.65 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார்கள். இதில் வருத்தமடைந்த ராஜா, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே சங்கடப்பட்டுள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் வல்லக்கோட்டை படத்தை ரூ.1.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக வெளியில் செய்திகளை பரப்பியுள்ளனர். இதனால் மன வருத்தத்திற்கு ஆளான ராஜா, தான் மோசடி செய்யப்பட்டதை பொறுத்தக் கொள்ள முடியாமல், இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால் இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சன் பிக்சர்ஸ் மோசடி குறித்து 3 புகார்கள் அடிப்படையில் தலைமை சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்ட நிலையில் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை ராஜா விருகம்பாக்கம் போலீசில் புகாராக அளித்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த 4 வது  வழக்கில் சக்சேனா மற்றும் ஐயப்பனை  மீண்டும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஐயப்பன் மற்றும் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர். 

ஏற்கனவே மாப்பிள்ளை படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் புகார் கொடுத்துள்ள ரூ.3.37 கோடி மோசடி வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை போலீஸ் காவலில் வைத்து 2 நாள் விசாரிக்க சைதாப்பேட்டை 17 வது அமர்வு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே தீராத விளையாட்டுப்பிள்ளை, பொல்லாதவன், மாப்பிள்ளை ஆகிய 3 படத் தயாரிப்பாளர்கள் சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்துள்ளனர். தற்போது வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர் ராஜா கொடுத்துள்ள 4 வது புகாரின் பேரில் மீண்டும் சக்சேனா கைது செய்யப்படுவது குறிப்பிடத் தக்கது. இந்த புகார் பட்டியல் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சக்சேனா மீது குண்டர் சட்டம் பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: