முக்கிய செய்திகள்

பாராளுமன்ற கூட்டம் முன்கூட்டியே முடிகிறது

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      இந்தியா
lok-sabha

 

புதுடெல்லி, மார்ச்.3 - தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற கூட்டம் முன்கூட்டியே முடிகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி முதலாவதாக அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. இங்கு முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4 ம்தேதி தொடங்குகிறது. 13ம் தேதி தமிழகம், கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் 6 கட்டமாக நடத்தப்படும் தேர்தல் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. 

இதனால் பாராளுமன்ற கூட்டத்தை நீண்ட நாட்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் மாநிலங்களை சேர்ந்த எம்.பி. க்களும் கட்சி தலைவர்களும் தேர்தல் வேலைகளை சமாளிக்க தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிடுவார்கள். இதனால் அவர்கள் பாராளுமன்ற கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படும். இதனால் பாராளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்து விட திட்டமிட்டுள்ளனர். தற்போது நடந்து வரும் கூட்டத்தை வருகிற 16ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்னர் 13 நாள் விடுமுறை விட்டு மார்ச் 28ம் தேதி மீண்டும் கூட்டம் நடப்பதாக இருந்தது. சட்ட சபை தேர்தலால் இதில் மாற்றம் செய்ய உள்ளனர். மார்ச் 16ம் தேதி கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது பின்னர் விடுமுறையை குறைத்துவிட்டு அடுத்த ஒன்று இரண்டு நாட்களிலேயே கூட்டத்தை தொடங்கி ஏப்ரல் 8க்குள்பட்ஜெட் கூட்டத்தை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். எதிர்கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தேதியை இறுதி செய்யும். மார்ச் இறுதிக்குள் நிதி சம்பந்தமான அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்படும். அவசரமில்லாத மசோதாக்களை மழைக்கால கூட்டத்தொடருக்கு தள்ளி வைக்கவும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: