முக்கிய செய்திகள்

வெளிநாட்டில் ரூ.3000 கோடி ஊழல் பணத்தை பதுக்கிய ஆ.ராசா?

Raja1

புதுடெல்லி, மார்ச் - 3 - ஊழல் பணத்தில் ரூ. 3000 கோடியை மொரீசியஸ், செசல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்குகளில் ஆ.ராசா பதுக்கி வைத்திருக்கலாம் என்று சி.பி.ஐ. நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு பிறகு, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆ.ராசாவுக்கு வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகள் அவரது மனைவிக்கு உள்ள வங்கிக் கணக்குகள் போன்ற விபரங்களை கேட்டறிந்து வருகின்றனர். மொரீசியஸ், செசல்ஸ் என்ற தீவு நாடுகளுக்கு  சி.பி.ஐ. அதிகாரிகள்  இதுதொடர்பாக கடிதங்களை அனுப்பி இருந்தனர். அந்த கடிதங்களுக்கு இந்த இரு குட்டி நாடுகளின் அதிகாரிகள் தங்களது பதில்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த கடிதங்கள் மூலம் சில முக்கிய தகவல்கள்  கிடைத்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆ.ராசா ரூ.3000 கோடியை பதுக்கி வைக்க  மொரீசியஸ், செசல்ஸ் தீவுகளில் உள்ள   தனது மனைவியின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி இருக்கிறார் என்று சி.பி.ஐ. நம்புவதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன. இதேபோல 2 ஜி. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையை மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகளும் நடத்தி வருகின்றனர். 

 ஆ.ராசாவுக்கு எந்தெந்த நாடுகளில் வங்கிக் கணக்குகள் உள்ளன என்பது குறித்து 10 நாடுகளுக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் விபரமறியும் கடிதங்களை அனுப்ப இருப்பதாகவும் தெரியவருகிறது. சிங்கப்பூர், மொரீசியஸ், சைப்ரஸ், துபாய், ரஷ்யா, நார்வே, ஜெர்சி தீவு, பிரிட்டீஷ் வர்ஜின் தீவு, ஐல் ஆப் மேன் ஆகிய நாடுகளில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் பாராட்டி உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: