முக்கிய செய்திகள்

இந்தியாவின் நிதிநிலைமை வலுவாகவே உள்ளது: பிரணாப்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.9 - இந்தியாவின் நிதிநிலைமை வலுவாகவே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் இந்திய பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் கடன்வாங்கும் தகுதி குறைந்துள்ளது. இதனையொட்டி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. மும்பை பங்கு சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியதுமே 518 புள்ளிகள் மளமளவென சரிந்தன. இந்திய பங்கு சந்தையில் 140 புள்ளிகள் சரிந்தன. இதனால் முதலீட்டார்களும் பெரும் கம்பெனி பங்குதாரர்களும் கவலையில் மூழ்கத்தொடங்கினர். இந்தநிலையில் இந்தியாவின் நிதிநிலைமை வலுவாகவே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். உலகின் இதர நாடுகளைவிட இந்தியாவின் நிதி நிலைமை நன்றாகவே உள்ளது. இந்தியாவுக்கு வரும் அன்னிய முதலீடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியும் நிதிநிலைமையும் மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. அதனால் எந்த சவாலையும் இந்தியா சமாளித்து தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நேற்று பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி ளிக்கையில் தெரிவித்தார். இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடனும் வேகமாக வளர்ச்சியிலும் இருக்கிறது என்றும் முகர்ஜி மேலும் கூறினார்.  இதனையொட்டி மும்பை பங்குசந்தையில் வீழ்ச்சு குறைந்தது. 518 புள்ளிகள் சரிவில் இருந்த பங்கு சந்தை கொஞ்சம் மீண்டு 197 புள்ளிகள் சரிவோடு முடிந்தது. அதேமாதிரி இந்திய பங்கு சந்தையின் சரிவு 39 புள்ளிகளாக குறைந்தது. உலக பொருளாதார நிலை சரிந்து வரும் நேரத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் அன்னியசெலாவாணி கையிருப்பு, ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: