முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கிளை செயலாளர் படுகொலைக்கு நிதிஉதவி

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.7 - ராமநாதபுரம் எஸ்.பி. பட்டினம் அ.தி.மு.க கிளை செயலாளர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்  நிதியுதவியும் அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி பட்டினத்தை சேர்ந்த நாகூர்கனி என்பவர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து அ.தி.மு.க. எஸ்.பி பட்டினம் கிளை செயலாளர் முகம்மது யூசுப் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து இருவருக்குமிடையே ஏற்பட்ட விரோதத்தினையடுத்து, 4.9.11 அன்று முகம்மது யூசுப் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இந்தக் கொடூரமான படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன்,அவரது குடும்பத்திற்கு  அ.தி.மு.க. சார்பில் 1,00,000/- ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்  எனவும் அறிவித்துள்ளேன்.  மேலும் இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அனைவரும் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்  என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை (6.9.2011 ​ செவ்வாக் கிழமை), அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக, விவசாயப் பிரிவுச் செயலாளர்  கே.கே. சிவசாமி,  சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அ.அன்வர்ராஜா, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்  கே.சி ஆணிமுத்து ஆகியோர், திருவாடானை  ஒன்றியம், எஸ்.பி. பட்டினம் கிராமத்திற்கு நேரில் சென்று மறைந்த முகம்மது யூசுபினுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் அ.தி.மு.க. கட்சியின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக  1,00,000/-​ ரூபாயையும், பொதுச் செயலாளர்  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பி இருந்த இரங்கல் கடிதத்தையும் வழங்கினார்.
அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்