முக்கிய செய்திகள்

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜப்பான் பிரதிநிதிகள் சந்திப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.23 - சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜப்பான் தொழில் வர்த்தக சபை பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு நடத்தினர். அப்போது தமிழக தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்திற்கும் ஜப்பான் தொழில் வர்த்தக சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஜப்பான் தொழில் வர்த்தக சபை தலைவர் டடாஷிய் ஒகமுரா தலைமையில் ஜப்பான் தொழில் வர்த்தக சபை பிரதிநிதிகள் 26 பேர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது ஜப்பானுக்கும் தமிழகத்திற்கும் இடையே தொழில் வர்த்தக மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை  செய்யுமாறு ஜப்பான் தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். ஜப்பான் நாட்டவர் முதலீடு செய்வதற்கு தமிழகம் சிறப்பான இடமாக உள்ளது என்றும் தமிழகத்தில் ஏற்கனவே 246 ஜப்பான் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்றும் மேலும் பல  ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர  வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஜப்பான் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அதாவது 30 சதவீத ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில்  முதலீடு செய்துள்ளன  என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மோட்டார் வாகனத் தொழிலில் ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக முதலீடுகளை செய்துள்ளன என்றும், இந்தியாவிலேயே மோட்டார் வாகனத் தொழிலில் சென்னை முதலிடம் வகிக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். ஜப்பானுக்கும் தமிழகத்திற்கும் இடையே தொழில் வர்த்தக ஒத்துழைப்புக்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளன என்றும் தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் ஜப்பானிய அன்னிய நேரடி முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது அரசு செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.   

இந்த சந்திப்பின்போது முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில்  ஜப்பான் தொழில் வர்த்தக சபைக்கும் தமிழக தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தொழில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் ஆகியோரும் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: